தலைமைத்துவம் என்றால் என்ன?

sds

ஹனீபா ஏ. வஹாப் (இஸ்லாஹி)

இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்களை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களைத் தீட்டி அத்திட்டங்களை அமுலாக்க தம்மோடுள்ள பலரையும் ஆர்வத்தோடு பங்குபற்றச் செய்வதற்கும் குறித்த செயற்பாடுகளின்போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெறும் வழிகளைக் காட்டிக் கொடுப்பதற்கும் தலைவர் ஒருவர் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

அந்த வகையில் பாடசாலை வாழ்க்கையிலும் பிற்பட்ட சமூக வாழ்க்கையிலும் சிறந்த தலைவர்களாக விளங்க மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான அம்சங்களை பின்வரும் தலைப்புகளில் நோக்குவோம்.

1. தலைமைத்துவம் என்றால் என்ன?

2. செயற்திறன் மிக்க தலைமைத்துவம் என்றால் என்ன?

3. தலைமைத்துவத்தின் வகைகள்.

4. மாணவர்களும் தலைமைத்துவத் திறன்களின் அவசியமும்.

5. பாடசாலையில் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்கள்.

6. தலைவர் ஒருவரிடம் காணப்படவேண்டிய முக்கிய பண்புகள்.

 

1. தலைமைத்துவம் என்றால் என்ன?

தலைமைத்துவம் என்பது, “வற்புறுத்தல், வலுக்கட்டாயமில்லாத வழிமுறைகளினூடாக மக்களைச் செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் ஒரு திட்டமிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயன்முறையாகும். அத்திசை நீண்ட கால குறிக்கோளை நோக்கியதாகவோ அல்லது குறுகிய கால குறிக்கோளை நோக்கியதாகவோ அமையலாம்.”

ஒரு குழுவின் தலைவர் என்பவர், ஒரு குறித்த அந்தஸ்து வழங்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான முறையில் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கப்படும் அங்கத்தவராவார். அத்தோடு, தமது குழுவின் இலக்குகளை அமைப்பதிலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டிய ஒருவராகவும் இருக்கிறார்.

 

2. செயற்திறன் மிக்க தலைமைத்துவம் என்றால் என்ன?

செயற்திறன் மிக்க தலைமைத்துவம் என்பது தூரநோக்கு ஒன்றை உருவாக்கி, அதை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, பிறரின் ஒத்துழைப்பைத் திரட்டி, தூர நோக்கை அடைந்து கொள்வதற்கான செயற்பாட்டை ஊக்குவிக்கின்ற ஒரு செயல்முறை ஆகும். செயற்றிறன் மிக்க தலைவரானவர்…

–          எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குவார்.

–          அத்தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கென அறிவுபூர்வமான செயல் உபாயங்களை விருத்தி செய்வார்.

–          அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஒத்துழைப்பையும் இணக்கத்தையும் குழு முயற்சியை வழங்கக்கூடிய முக்கியமான கூட்டத்தினரின் ஆதரவையும் திரட்டுவார்.

–           செயல் உபாயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் முக்கிய பங்கெடுத்துத் தொழிற்படக்கூடிய ஆட்களை நல்ல முறையில் ஊக்குவிப்பார்

3. தலைமைத்துவத்தின் வகைகள்

பல்வேறுபட்ட தலைமைத்துவ வகைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக 1939ஆம் ஆண்டு கேட் லீவின் என்ற உளவியலாளரின் தலைமையின் கீழ் ஒரு குழு நியமிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் 3 வகையான தலைமைத்துவ வகைகள் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு பாடசாலைச் சிறுவர்கள் மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1) ஏகாதிபத்திய தலைமைத்துவம்

ஏகாதிபத்திய தன்மை கொண்ட தலைவர்கள் என்ன வேலை, எப்போது, எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான எதிர்பார்ப்பை முன்வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். தலைவருக்கும் அவரைப் பின்தொடர்கின்றவர்களுக்கும் இடையில் மிகத் தெளிவான வேறுபாடு காணப்படும். இத்தகைய தலைவர்கள் தம்முடன் இணைந்து பணியாற்றுகின்ற ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுக்காது சுதந்திரமாக தீர்மானங்களை எடுப்பவர்களாகக் காணப்படுவர்.

இத்தகைய தலைமைத்துவத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்கள், புத்தாக்கம் குறைந்ததாகவே காணப்படும் என்பது ஆய்வாளர்களின் முடிவு.

ஒரு குழு ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை எடுப்பதற்குப் போதிய அவகாசம் இல்லை என்ற சந்தர்ப்பத்திலும், குறிப்பிட்ட ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் ஒருவர், அக்குழுவில் தன்னை விட அறிவார்ந்தவர் யாருமில்லை என்ற நிலையிலும் இத்தகைய சர்வதிகாரத் தலைமைத்துவம் மிகச் சிறப்பாக பயனளிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

2) பங்கு கொள்ளும் அல்லது ஜனநாயகவாத தலைமைத்துவம்

கேட் லீவினால் முன்வைக்கப்பட்ட இவ்வகைத் தலைமைத்துவம் பொதுவாக தாக்கம்மிக்க ஒன்றாகக் காணப்படுகின்றது. ஜனநாகயவாதத் தலைவர்கள் தமது குழு உறுப்பினர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குகின்றனர். மட்டுமன்றி தாங்களும் அக்குழுவில் ஒருவராகப் பங்கு கொள்வதோடு தமது குழுவில் உள்ள ஏனைய ஊழியர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கின்றனர்.

லீவினின் இந்த ஆய்வின்படி, இத்தலைமைத்துவப் பண்பைக் கொண்ட குழுவில் இருந்த மாணவர்கள் முந்திய குழுவைவிட செயற்திறன் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர். எனினும் இக்குழுவின் பங்களிப்பு மிக உயர்ந்த தரத்தைக் கொண்டிருந்தது.

பங்கு கொள்ளும் அல்லது ஜனநாயகப் பண்பைக் கொண்ட தலைவர்கள் தமது தலைமைத்துவச் செயன்முறையில் ஏனைய உறுப்பினர்களும் பங்கு கொள்ளும் வகையில் ஊக்குவிப்பு வழங்கினாலும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் இறுதி அதிகாரத்தை தம்மிடம் வைத்துக் கொள்வர்.

3) பகிர்ந்தளிக்கும் தலைமைத்துவம் கட்டுப்பாடற்ற நிலை

இத்தலைமைத்துவத்துவப் பண்பைக் கொண்ட தலைவர்கள், தமது தலைமைத்துவத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்தளவு வழிகாட்டல்களை வழங்கக்கூடியவர்களாக அல்லது அறவே வழிகாட்டாதவர்களாக இருப்பர். தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தமது குழு உறுப்பினர்களிடம் கொடுத்து விடுவர்.

குழு உறுப்பினர்கள், குறிப்பிட்ட விடயத்தில் துறைசார்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் இவ்வகையான தலைமைத்துவம் தாக்கமுள்ளதாக இருக்கும். எனினும் ஊக்கம், சுறுசுறுப்பு என்பன குறைந்ததாகவே காணப்படும்.

இம்மூன்று வகையான தலைமைத்துவங்களிலும் இரண்டாம் வகையான தலைமைத்துவம் சிறப்பானது எனினும், ஏனைய இரு வகையான தலைமைத்துவங்களும் சிற்சில சந்தர்ப்பங்களில் பயனளிக்கத்தக்கன என்பது குறிப்பிடத்தக்கது.

4. மாணவர்களும் தலைமைத்துவத் திறன்களின் அவசியமும்

பாடசாலை, பள்ளிவாசல், நலன்புரி மன்றங்கள், இளைஞர் கழகங்கள் போன்ற சமூக நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்களிடம், “பாடசாலை மாணவர்கள் எத்தகைய விடயங்களைப் பெற்றிருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர் கள்?” என்று வினவினால் பெரும்பாலானோர், “தலைமைத்துவத் திறன்களையும் பண்புகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அவர்களால் தங்கள் சமூகத்திற்கு உதவி செய்திட முடியும்” எனப் பதிலளிப்பதைக் காணலாம்.

இன்னும் ஆச்சரியமூட்டத்தக்க விடயம் என்னவெனில், அதிகமான தொழில் நிறுவனங்கள்கூட தமது ஊழியர்களாக இத்தகைய தலைமைத்துவத் திறன்களைக் கொண்ட பட்டதாரிகளையே எதிர்பார்ப்பதாகும்.

உண்மையில் இன்றைய மாணவர்கள்தான் நாளை நாம் முன்னோக்கிக் கொண்டிருக்கும் எதிர்காலத்தின் தலைவர்களாக இருக்கின்றனர். நாளைய சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பும் கடமையும் இவர்களையே சாரும் என்பதால், பாடசாலைக் காலங்களிலேயே தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் ஒரு மாணவன் பெற்றுக் கொள்வது அவசியமாக அமைகிறது.

குறித்த ஒரு சமூகம், கல்வி கற்ற ஒரு மேதைக்குப் பின்னால் செல்வதைவிட, கல்வியோடு தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் கொண்ட ஒருவருக்குப் பின்னால் செல்வதையே விரும்புகின்றது. அதையே பாதுகாப்பானது எனவும் நம்புகின்றது. அந்தவகையில் பாடசாலைக் காலங்களிலேயே தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகக் காணப்படுகிறது.

5. பாடசாலையில் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்கள்

 1. விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள்
 2. மாணவர் மன்றம்
 3. காலை ஆராதனை நிகழ்ச்சிகள்
 4. பாடசாலைச் சிரமதானங்கள்
 5. மாணவர் பாராளுமன்றம்
 6. பாடசாலை நிகழ்ச்சிகள்
 7. மாணவர் தலைமைத்துவம்
 8. VIII.சாரணர் பயிற்சி முகாம்
 9. சுற்றுலா
 10. முதலுதவிப் பிரிவு
 11. இசை, வாத்தியப் பிரிவு
 12. பாடசாலைக் கழகங்கள்

இதுபோன்ற இன்னும் பல நிகழ்ச்சிகள் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்க்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றன. இவை தவிர ஆசிரியர்களால் திட்டமிட்டு ஏற்பாடு செய்கின்ற விஷேட நிகழ்ச்சிகளும் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களையும் பண்புகளையும் விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களாக அமைகின்றன.

6. தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டிய முக்கிய பண்புகள்

மாணவர்களாயினும் சரி, ஏனையவர்களாயினும் சரி ஒருவர் சிறந்த தலைவராக மாறுவதற்கு அதற்கே உரிய பண்புகளை அவர் தன்னகத்தே கொண்டிருப்பது அவசியமாகும்.

அந்தவகையில் ஒரு தலைவரிடம் காணப்பட வேண்டிய மிக முக்கியமான பண்புகளை பின்வருமாறு பட்டியற்படுத்தலாம்:

1) உண்மைத் தன்மை நம்பகத்தன்மை

2) தூரநோக்கான சிந்தனை

3) தொடர்பாடற் திறன்

4) ஏனையவர்களுடன் சுமுகமான உறவு

5) செல்வாக்குச் செலுத்தும் தன்மை

6) நெகிழ்வுத் தன்மை

7) குழுவாகச் சேர்ந்து வேலை செய்யும் பண்பு

8) பயிற்சியளித்தலும் விருத்தி செய்தலும்

9) தீர்மானிக்கும் ஆற்றல்

10) திட்டமிடல்

11) கலந்துரையாடல்

இவை தவிர இன்னும் பல பண்புகளும் காணப்படுகின்றன. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முழு வாழ்க்கையும் தலைமைத்துவத் திறன்களும் தலைமைத்துவப் பண்புகளும் நிறைந்ததாகவே காணப்படுகிறது. முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்தான் எங்களுடைய முன்மாதிரிமிக்க தலைவர் என்ற வகையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதனூடாக அத்தகைய தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் தேடியறிந்து நமது பாடசாலை வாழ்க்கைக் காலத்திலேயே அவற்றைச் செயற்படுத்துவதனூடாக சமூகத்தின் சிறந்த தலைவர்களாக மாற்றுவதற்கு முயற்சிப்போம்,

இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s