வியாழன் கிரகம் இன்று 03-12-2012 பூமிக்கு அருகே வருவதால் வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன்- இன்று திங்கட்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பின்- வானில் கிழக்குப் பகுதியில் பிரகாசமாகத் தெரியும். இதை வெறும் கண்களால் பார்க்கலாம். நள்ளிரவுக்குப் பின் தெற்குப் பகுதியில் வியாழன் காணப்படும்.
பூமியில் இருந்து பார்க்கும்போது- சூரியனுக்கு நேராக ஒரு கிரகம் வரும்போது மிகவும் பிரகாசமாகத் தெரியும். வியாழனைப் பொறுத்தவரை 13 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்று பிரகாசமாகத் தெரியும். முன்னதாக 2011ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் திகதி வியாழன் கிரகம் பிரகாசமாகத் தெரிந்தது. அடுத்ததாக 2014ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி பிரகாசமாகத் தெரியும்.
சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் பூமிக்கும்- வியாழனுக்கும் இடையே குறைந்தபட்ச தூரம் 58 கோடியே80 லட்சம் கி.மீ.- அதிகபட்ச தூரம் 96 கோடியே 70 லட்சம் கி.மீ. என கணக்கிடப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையேயான தூரம் 60 கோடியே80 லட்சம் கி.மீ. பூமிக்கு இவ்வளவு அருகே வருவதால்தான் வியாழன் இன்று வானில் பிரகாசமாகத் தோன்றுகிறது.
– அரசாங்க தகவல் திணைக்களம்