நற்குணம்

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

”ஹுஸ்னுல் குலுக்” நற்குணம் என்றால் என்ன? என்பதற்கு அப்துல்லாஹ் பின் முபாரக்(ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்ததாக இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ”நற்குணம் என்பது, முகமலர்ச்சி, நன்மைகளை பரவச் செய்தல், பிறரை நோவினை செய்வதை தவிர்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளாகும். (ரியாளுஸ் ஸாலிஹீன்) நற்குணத்திற்கு இஸ்லாத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மனிதர்களை அதிகம் சுவர்க்கத்தில் நுழைவிக்கக்கூடியது நற்குணமாகும்.

மறுமையின் தராசியில் அதிகம் எடையையும், இரவெல்லாம் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பவரின் அந்தஸ்தின் அளவைக்கூட அது பெற்றுத்தந்து விடுகின்றது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க நற்பண்புகளை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நற்புடன் நடக்கும்படி அல்லாஹ்வே கட்டளையிடுகின்றான்.

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும். (அல்குர்ஆன் 7: 199).

இதற்கு முன்மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கின்றார்கள். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன் 68: 4).

நபி(ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்த அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள் நபி(ஸல்) அவர்கள்: நபி(ஸல்) அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அவர்கள், ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

பிறரின் மனதில் கவலையை ஏற்படுத்தும் ஒன்றை கூட நபி(ஸல்) அவர்கள் செய்ய விரும்பவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக அளித்தேன், அதை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள் அப்பொழுது என் முகத்திலுள்ள (வருத்தத்தை பார்த்து ஹஜ்ஜிற்காக) நாம் இஹ்ராம் கட்டி இருப்பதால், இதை (வேட்டையாடப்பட்ட காட்டு கழுதையை) ஏற்றுக் கொள்ளாமல் நாம் உம்மிடம் திருப்பிக் கொடுக்கிறோம் என அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆகவே, நாமும் நமது வாழ்க்கையில் நல்ல பழக்கவழக்கங்களை நற்குணங்களை பேணிக் கொள்ள வேண்டும். நமது சொல், செயல், நடைமுறைகள் அனைத்திலும் நற்குணம் பேணப்படவேண்டும். பிறரின் உள்ளம் சிதையாத முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். பிறரை சந்திக்கும் போதும் பேசும் போதும் கொடுக்கல், வாங்கல் செய்யும் போதும் அனைத்து நிலைகளிலும் நற்குணம் பேணப்பட வேண்டும்.

வீட்டிலிருந்து ஆரம்பமான நற்குணம் வீதியிலும் வேலை செய்யும் இடங்களிலும் நண்பர்கள் சக ஊழியர்கள் நமக்கு மேலானவர்கள் குறைந்த சம்பளம் பெறுபவர்கள் மேல் நாட்டவர்கள்? கீழ் நாட்டவர்கள்? வெள்ளையார்கள், கறுப்பர்கள், அரபிகள், அஜமிகள் என்ற வித்தியாசமின்றி அனைவருடனும் நற்பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இரத்த உறவுகளான தாய், தந்தை, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் மற்றும் மனைவி இன்னும் நம் குடும்பத்தார் அனைவருடனும் நற்குணம் பேணப்பட வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் சபையில் அனைத்து வர்க்கத்தினரும் ஒன்றுபோல் நடத்தப்பட்டார்கள், அதைக்கண்ட குறைஷிகள் ஏழைகளை குறைஷியல்லாதவர்களை அந்தச் சபையிலிருந்து நீக்கும்படி கேட்டுக் கொண்டபோது அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். இவ்வாறு பேணப்பட வேண்டிய ஒன்றுதான் நற்குணம்.

நற்குணத்திற்கு இஸ்லாம் வழங்கிடும் சிறப்புகள்:

நன்மை என்றாலே அது நற்குணம்தான். நான் ரஸுலுல்லாஹி(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், தீமையைப் பற்றியும் கேட்டேன். அதற்கவர்கள், நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உம் மனதை உறுத்துவதும், அதனைப் பிறர் அறிவதை நீர் வெறுப்பதுமாகும் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

வெறும் வெளி அசைவுகளோடு நற்குணம் என்னும் அந்த நல்லபண்பு முடிந்து விடவில்லை, நன்மைகள் அனைத்தும் நற்குணமே!. ஆகவே, நற்குணத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகளை அடைந்து கொள்வதற்கு நற்கருமங்களை அதிகம் செய்ய வேண்டும். அவ்வாறே, பாவத்தை விட்டும் தவிர்ந்து நடப்பதும் நற்குணமாகும். ஆகவே, நாம் நற்குணவாதிகளாகுவதற்கு பாவங்களை விட்டும் தவிர்ந்து நடப்போமாக!.

மனிதர்களில் சிறந்தவர் நற்குணமுடையவர்:

நபி(ஸல்) அவர்கள் தீமையைச் செய்பவர்களாகவோ, சொல்பவர்களாகவோ தீமையை நாடகூடியவர்களாகவோ இருந்ததில்லை. உங்களில் மிகச் சிறந்தவர்கள், அழகான குணமுடையவர்களே! (புகாரி, முஸ்லிம்)

தராசியில் அதிகம் எடையுள்ளது:

நபி(ஸல்) கூறினார்கள், கியாமத் நாளில் முஃமினான மனிதனின் ”மீஸான்” தராசில் மிகக் கனமாக இருப்பது, நற்குணத்தைத் தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் தவறான பேச்சுகளை பேசும், தீய செயல்களைச் செய்யும் மனிதனைக் கோபிக்கிறான். (திர்மிதி)

அதிகம் சுவர்க்கத்தில் நுழைவிக்கக்கூடியது:

சுவர்க்கத்தில் மக்களை நுழைவிப்பவைகளில் அதிகமானவை எவை என (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் இறையச்சமும், நற்குணமும் ஆகும், எனக் கூறினார்கள். நரகில் மக்களை நுழைவிப்பவைகளில் அதிகமானவை எவை? என நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கவர்கள், வாயும், மர்மஸ்தானமும் ஆகும் எனக் கூறினார்கள். (திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், முஃமின்களில் அழகிய குணமுடையவரே, அவர்களில் ஈமானில் பரிபூரணமானவர் ஆவார். உங்களில் சிறந்தவர், உங்களின் பெண்களிடம் சிறந்தவரே! (அவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவரே) (திர்மிதி).

இரவெல்லாம் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பவிரின் நன்மை கிடைக்கும்:

நபி(ஸல்) கூற நான் செவிமடுத்தேன், நிச்சயமாக முஃமின், தன் அழகிய குணத்தால், நின்று வணங்கக்கூடிய நோன்பாளியின் அந்தஸ்தை அடைந்துவிடுவார் (அபூதாவூது).

சுவனத்தின மூன்று தளங்கள்:

நபி(ஸல்) கூறினார்கள், தான் உண்மை கூறுவதாக இருந்தபோதிலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தமாஷானாலும் பொய்யை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் நடுப்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அழகான குணமுடையவருக்க சுவனத்தின் மேல்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். (ஆபூதாவூது).

அழகிய குணமும் நபி(ஸல்) அவர்களின் அன்பும்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களில் அழகிய குணமுள்ளவர்கள், எனக்கு மிக நேசமானவர்களிலும், மறுமைநாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்போரிலும் அடங்குவர். உங்களில் எனக்கு மிக வெறுப்பானவர்கள். மேலும் மறுமை நாளில் என்னை விட்டுத் தூரத்தில் இருப்பவர்கள், உங்களில் அதிகமாகப் பேசுபவர்களும், தங்கள் பேச்சால் மக்களிடம் பெருமை அடிப்பவர்களும், முதபய்ஹிகூன்களும், ஆவார்கள். அப்பொழுது தோழர்கள் ”யா ரஸுலுல்லாஹ்! ஸர்ஸாரூன் (அதிகம் பேசுபவர்கள்) மற்றும் முதஷத்திகூன் (பேச்சைக் கொண்டு பெருமையடிப்பவர்கள் ஆகியோரை நாங்கள் அறிவோம். முதபய்ஹிகூன் என்றால் யார்?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”அவர்கள் பெருமையடிப்பவர்கள்” என கூறினார்கள் (திர்மிதி).

வெற்றியை தேடித்தரும் நான்கு பண்புகள்:

உம்மிடத்தில் நான்கு பண்புகள் இருந்தால் உலகத்தில் எது தப்பிப்போனாலும் நீர் கவலைப்படாதே. உண்மை உரைத்தல், அமானிதம் பேணுதல், நற்குணம், உணவில் பத்தினித் தன்மை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஸஹீஹ் அல் ஜாமிஃ)

நற்குணம் வாழ்நாளை அதிகப்படுத்தும்:

இரத்த பந்தத்தை சேர்த்து நடப்பது, நற்குணம், அண்டை வீட்டாரை அரவணைத்தல் இவைகள் வாழ்நாளையும் அதிகப்படுத்தும், நாட்டையும் வாழவைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸில்ஸிலா ஸஹீஹா)

இப்படிப்பட்ட நற்பண்புள்ளவர்களாக வாழ்ந்து மரணிக்க, நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

-சுவனப்பாதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s