பெருநாள் சட்டங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றை பெருநாட்களாகக் கொண்டாடி வருகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டு நாட்கள் மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாட்களாக உள்ளன. ஒன்று ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள், மற்றொன்று ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள்.

பொதுவாக பெருநாட்கள் என்றாலே அதில் கேளிக்கைகளும் இடம் பெற்றிருக்கும். இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு மக்கள் வரம்பு மீறிச் சென்றுவிடக் கூடாது என்பதால் பெருநாட்களின் போது படைத்த இறைவனை அதிகம் நினைவு கூர்ந்து பெருமைப்படுத்துமாறு இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இதற்கென பெருநாள் தொழுகை எனும் சிறப்புத் தொழுகையையும் மார்க்கம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாம் வலியுறுத்தியுள்ள பெருநாள் தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் எமக்கு எவ்வாறு கற்றுத்தந்தார்கள்  என்பது மங்கிப்போய், பல்வேறு பித்அத்துகள் அதில் நுழைவிக்கப்பட்டு எம் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் வழிகாட்டலில் பெருநாள் தொழுகை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துமுகமாக இப்பிரசுரம் வெளியிடப்படுகின்றது.

இதனைப் படிக்கின்ற சகோதரர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் அடிப்படையிலும், நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வழிமுறையிலும் தங்களது அமல்களை அமைத்து ஈருலகிலும் ஈடேற்றம் பெறுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

1. பெருநாள் தொழுகையின் அவசியம்:

பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். பள்ளிவாயல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழுகை  மற்றும் ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. அப்படி சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

2. தொழுகை நேரம்:

இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : பராஃ பின் ஆஸிப்(றழி), நூல் : புஹாரி

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடிந்த மறு நிமிடமே தொழுது விட வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில், பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெளிப்படும் வரை தொழுவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்.

3. பெருநாள் தொழுகையில் பெண்கள்:

நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டும் சற்று விலகியிருக்கவேண்டும். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (றழி), நூல் : புஹாரி

பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (றழி), நூல் : புஹாரி

4. திடலில் தொழுகை:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (றழி), நூல் : புஹாரி.
கஸீர் பின் ஸல்த் (றழி) என்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது.

5. தொழுகையும், குத்பாவும்:

நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (றழி), உமர் (றழி), உஸ்மான் (றழி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி), நூல் : புஹாரி.

இன்றைய தினத்தில் நாம் முதன் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர் : பர்ராஃ பின் ஆஸிப் (றழி), நூல் : புஹாரி.

6. மிம்பர் (மேடை):

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (றழி), நூல் : இப்னு குஸைமா.

7. உரையில் இறையச்சத்தைப் போதித்தல்:

பெருநாளன்று நான் நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்தேன். பாங்கு, இகாமத் இல்லாமல் உரைக்கு முன்பே தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு பிலால் (றழி) மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வை அஞ்சும்படி கட்டளையிட்டு, கட்டுப்படும்படி தூண்டி மக்களுக்கு அறிவுரை வழங்கி போதனை செய்தார்கள். (அங்கிருந்து) சென்று பெண்களிடம் வந்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கி போதனை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (றழி), நூல் : முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்து ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்த ஆரம்பித்து) விடுவார்கள். படையனுப்ப வேண்டிய தேவையிருப்பின் அதை மக்களுக்கு நினைவூட்டுவார்கள். இதல்லாத பணியிருப்பின் அதை மக்களுக்கு உத்தரவிடுவார்கள். தர்மம் செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். எங்களில் அதிகம் தர்மம் செய்தவர்கள் பெண்கள்தான். அறிவிப்பவர் : அபூ ஸஈத் அல் குத்ரி (றழி), நூல் : முஸ்லிம்.

8. பெண்களுக்கு தனியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்களிடம் வந்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி), நூல் : புஹாரி.

9. பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்:

ஜும்ஆ உரையை காது தாழ்த்திக் கேட்பதற்கு என்ன என்ன காரணங்கள் பொருந்துமோ அதே காரணங்கள் பெருநாள் உரைக்கும் பொருந்துகின்றன. எனவே, நபித்தோழர்கள் எப்படி நபி (ஸல்) அவர்களின் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்பார்களோ அதுபோல் நாமும் அமைதியாக இமாமின் உரையைக் கேட்க வேண்டும்.

10. உயிரோட்டமாக உரை அமைதல் வேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும்போது அவர்களின் இரு கண்களும் சிவந்து, குரல் உயர்ந்து, ஆக்ரோசம் அதிகமாகி, ஒரு போர்ப்படையை எச்சரிக்கை செய்பவர் போல் ஆகிவிடுவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (றழி), நூல் : முஸ்லிம்.
11. ஓர் உரையா? இரண்டு உரையா?

இரு பெருநாட்களிலும் நிகழ்த்தப்படக் கூடிய உரையின்போது இடையில் உட்கார்வதற்கு நபிவழியில் எதுவித ஆதாரமும் இல்லை. தரையில் நின்று அவர்கள் உரையாற்றியதால், இதில் உட்காருவதற்குரிய சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

12. ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்:

பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (றழி), நூல் : புஹாரி.
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாதையில் வருவார்கள், இன்னொரு பாதையில் திரும்புவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (றழி), நூற்கள் : இப்னு மாஜா, அபூ தாவூத்.

13. பெருநாள் தொழுகைக்குப் பின் ஸுன்னத் உண்டா?

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்தத் தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (றழி) அவர்களும் இருந்தார்கள்.

14. சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் சில பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு விட்டு புறப்படுவார்கள். நூல் : புஹாரி.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்பு சில ஸஹாபாக்கள் சாப்பிட்டதை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். நூல் : புஹாரி.
நபியவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சாப்பிடாமல் தொழுகைக்குச் செல்வார்கள் என்பது பலவீனமான அறிவிப்பாகும்.

15. திடலில் தடுப்பு ஏற்படுத்தல்:

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (றழி), நூல் : புஹாரி.

16. பாங்கு இகாமத் உண்டா?

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பொருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (றழி), ஜாபிர் (றழி), நூல் : புஹாரி.

17. பெருநாள் தொழுகை:

சில ஸஹாபாக்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்று வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

18. தக்பீர்களுக்கு இடையில்:

ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீதும் இல்லை. இன்று நடைமுறையில் ஒவ்வொரு தக்பீர் சொல்லும்போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் தக்பீர் என்ற சொல்லை தக்பீர் கட்டுதல் என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பதாகும். இந்த கூடுதல் தக்பிர்களுக்கிடையில் சில திக்ருகள் ஓதப்படுகின்றன. இதற்கு நபிவழியில் எதுவித ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த தக்பீர்களுக்கிடையில் ஓதுமாறு எந்தவொரு திக்ரையும் கற்றுத்தரவுமில்லை. எனவே. முதல் தக்பீரின்போது மட்டும் கைகளை உயர்த்தி கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளை கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என ஏழு தடவைகள் கூறிக் கொள்ள வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறிக் கொள்ள வேண்டும். கைகளை உயர்த்தவோ அவிழ்க்கவோ ஆதாரம் எதுவுமில்லை.

19. பெருநாள் தொழுகையில் ஓதவேண்டிய அத்தியாயங்கள்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் ‘ஸப்பிஹிஸ்ம றப்பிகல் அஃலா’ (அத்தியாயம் : 87) ‘ஹல் அதாக ஹதீதுல் ஹாஷியா’ (அத்தியாயம் :88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (றழி), நூல் : முஸ்லிம்.
அபூ வாகித் அல் லைஸி (றழி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் பின் கத்தாப் (றழி) அவர்கள் கேட்டபோது, அவ்விரு தொழுகைகளிலும் ‘காஃப் வல் குர்ஆனில் மஜீத்’ (அத்தியாயம் : 50) ‘இக்தறபதிஸ் ஸாஅ’ (அத்தியாயம் : 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள்.’ என்று பதிலளித்தார்கள். (நூல் : முஸ்லிம்)

ஆகவே, மேற்கூறப்பட்ட அடிப்படையில் எமது பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொள்வோமாக!
‘எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது சத்திய தீனுல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் ஈடேற்றம் பெறும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் வழங்குவானாக!’

வெளியீடு
இஸ்லாமிக் சென்றர்
த.பெ.இல-10, காத்தான்குடி-30100

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s