தன்னம்பிக்கையுடன் விளையாடினால் கிரிக்கட்டில் மட்டுமல்ல எதிலும் வெற்றி கிடைக்கும்

அறியவேண்டிய ஓர் வரலாறு

(தினகரன் ஆசிரியர் தலைப்பு)

நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் தேசிய விளையாட்டாக இருந்து வந்த உதைபந்தாட்டம் அன்று கொழும்பில் நாகரீக மோகத்தில் மூழ்கியிருந்தவர்களையும் கிராமிய மக்களையும் கவர்ந்திருந்தது.

காலப்போக்கில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கிரிக்கட் போட்டி படித்தவர்களையும், செல்வந்தர் களையும் மட்டுமன்றி கிராமத்து இளைஞர்களையும் கடந்த 30 ஆண்டுகளாக பிரமை பிடித்தவர்களைப் போன்று ஆட்டிப் படைத்துக் கொண் டிருக்கிறது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வீதி ஓரங்களில் சனி, ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மென்பந்து கிரிக்கட் விளையாட்டில் இளைஞர்கள் ஈடுபடும் காட்சியை நாம் பார்ப்பது அரிதிலும், அரிதாக இருந்தது. அதற்கு பதில் அன்று மென்பந்தைக் கூட வைத்துக் கொண்டு உதைபந்தாட் டத்தில் எமது இளைஞர்கள் வீதிகளில் மட்டுமன்றி மைதானங்களிலும் ஈடுபடுவார்கள்.

இலங்கையின் முதலாவது விளையாட்டுத்துறை அமைச்சரான வீ.ஏ. சுகத தாஸ, நீண்டகாலம் கொழும்பு மாநகர சபையின் மேயராக இருந்த பின்னர் வடகொழும்பு தொகுதியில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார். பாராளுமன்றத்திற்கு முதல் தடவையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதாவது 1965ம் ஆண்டில் தேசிய அரசாங்கத் தின் பிரதம மந்திரியாக இருந்த டட்லி சேனநாயக்க, திரு. வீ.ஏ. சுகததாஸவை இலங்கையின் முதலாவது விளையாட்டு துறை அமைச்சராக நியமித்தார்.

உதைபந்தாட்ட வீரராக இருந்த திரு. சுகததாஸ உதைப்பந்தாட்டத்தை தேசிய ரீதியில் முன்னணி விளையாட்டாக வளர்க்கும் எண்ணத்துடன் சுகததாஸ விளையாட்டரங்கை ஆரம்பித்து அவ்வரங்கில் உதைப்பந்தாட்டம் மத்திரமே நடைபெற வேண்டுமென்றும் உத்தரவிட்டார். அன்றைய காலகட் டத்தில் இலங்கை உதைபந்தாட்டத் துறையில் சிறப்புற்று விளங்கியது.

அன்று நாம் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளுடன் வருடா வருடம் உதைபந்தாட்ட போட்டிகளில் ஈடுபட்டு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெற்றியும் பெற்றிருந்தோம்.

காலப்போக்கில் மெய்வல்லுநர் போட்டிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்த காரணத்தினால் சுகததாஸ விளையாட்டரங்கம் உதைபந்தாட்ட விளையாட்டில் இருந்து பறிக்கப்பட்டு, மெய்வல்லுநர் போட்டிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது.

அதையடுத்து 1977ம் ஆண்டு முதல் கிரிக்கட் போட்டிக்கு அரசாங்கத்தின் அனுசரணை கூடுதலாக கிடைத்தமையினால் நம்நாட்டவர்கள் கிரிக்கட்டில் அதிக ஈடுபாடு கொண்டார்கள்.

கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் பெரும் முயற்சியினால் இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து 1980ம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் கிடைத்தது.

1982ம் ஆண்டில் இலங்கை அணி கொழும்பு பி.சரவணவமுத்து மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை ஈட்டியது.

அன்றிலிருந்து நாம் படிப்படியாக சர்வதேச தரத்திற்கு கிரிக்கட் விளையாட்டில் உயர்ந்தோம். 1996ம் ஆண்டில் இலங்கை முதல் தடவையாக 50 ஓவர் ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை பாகிஸ்தானில் வைத்து தோற்கடித்து உலக கிரிக்கட் சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

அன்று இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய அர்ஜூன ரணதுங்க இந்த வெற்றிக்கிண்ணத்தை அன்றைய பாகிஸ்தான் பிரதமமந்திரி பெனாசிர் பூட்டோ அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான சம்பவங் கள் இன்றும் எமது கிரிக்கட் ரசிகர்கள் மனதிலிருந்து நீங்கியிருக்காது.

50 ஓவர் கிரிக்கட் போட்டியையும் மிஞ்சிவிடக் கூடிய வகையில் புதிதாக அறிமுகம் செய்த 20க்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று உலகின் கிரி க்கட் ரசிகர்களின் பேரபிமானத்தைப் பெற்றுள்ளது. மக்களுக்கு பல மணித்தியாலங்கள் மைதானத்தில் இருந்து ஒரு கிரிக்கட் போட்டியை பார்த்து ரசிப்பது கடினமாக இருந்த காரணத்தினால் சுமார் 4 மணித்தியா லங்களில் முடிவடையும் 20க்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று மக் கள் ஆதரவை பெருமளவில் பெற்றிருக்கிறது.

கிரிக்கட் போட்டி ஒரு கனவான்களின் விளையாட்டாகும். இதில் வெற்றியும் தோல்வியும் சகஜமாகும். ஒரு சிறந்த விளையாட்டு வீரன் வெற்றியின் போது பெருமகிழ்ச்சி அடைந்தாலும், தோல்வியில் மனம் தளர்ந்து விட மாட்டான். இன்று தோல்வி அடைபவர்கள் நாளை வெற்றியடைவார்கள் என்ற மனப்பக்குவத்துடனும் பொறுப்புணர்வுடன் விளையாடுவது அவ சியமாகும்.

இலங்கை அணி 20க்கு இருபது கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட் டத்தில் தோல்வியடைந்தமைக்கு அவர்களின் திறமையின்மை காரணம ல்ல. இறுதி ஆட்டத்தில் தங்களால் வெற்றி பெற முடியுமென்ற தன்னம் பிக்கை இலங்கை அணி வீரர்களிடம் அதிக அளவில் இல்லாததே பிர தான காரணமாக இருந்திருக்கலாம் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து தெரிவித்தார்.

இந்தக்கூற்றை நாம் ஏற்றுக் கொள்வது தவறில்லை. கடந்த உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி இறுதி ஆட்டத்தில் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்குவதற்காக விளையாடிய போதிலும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைவதற்கு தன்னம்பிக்கை இன்மையே கார ணமாகும். இதற்கு ஒரு விடயத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ள லாம்.

இறுதிப் போட்டிக்கு முன்னர் நடந்த ஆரம்பப் போட்டிகளில் சம பியன் பட்டத்தை வென்ற அணிகளை படுதோல்வியடையச் செய்த இலங்கை அணி, இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்ததை இதற்கு ஒரு உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கிந்தியதீவுகள் அணி 30 ஆண்டு காலமாக சம்பியன் பட்டத்தை பெற முடியாவிட்டாலும், அவ்வணி வீரர்கள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களிலும் கனவான்களைப் போன்று நடந்து கொண்டார்கள். அதனால், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிக்கு உலகெங்கிலும் மக்களின் அபிமானமும், பேராதரவும் பெருகிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s