இஸ்லாம் வட்டியையும் அதனுடன் தொடர்பான அனைத்து வகையான கொடுக்கல் வாங்கல்களையும் தடை செய்து வியாபாரமும் உட்பட தொழில்சார் நடவடிக்கைகளை அனுமதித்துள்ள ஓர் புனிதமான மார்க்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறு ஏவியுள்ள ஏழு பெரும் பாவங்களில் வட்டியும் அடங்கும் (புகாரி, முஸ்லிம்)
தெளராத், இன்ஜீல் போன்ற இஸ்னத்திற்கு முன்பிருந்த வேதங்களிலும் வட்டி தடை செய்யப்பட்டே இருந்தது. அல்குர்ஆன் வட்டியைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
‘(மற்ற) மனிதர்களின் செல்வங்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வமும்) அதிகரிப்பதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் செல்வம் அல்லாஹ்விடத்தில் அதிகரிப்பதில்லை. மாறாக அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீங்கள் ஸகாத்தாக ஏதும் கொடுப்பதும் (அல்லாஹ் விடத்தில் அதிகரிக்கும்) இத்தகையோரை (தங்களுக்குரிய நன்மையை) இரட்டிப்பாக பெறக்கூடியவர்கள்.’
(அல்குர்ஆன் : 30 – 39)
வட்டி கொடுக்கல் வாங்கல் ஹராமானது என்பதனை பின்வரும் இறைவசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது. ‘விசுவாசிகளே! நீங்கள் (உண்மை விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்விற்குப் பயந்து வட்டியில் (இதுவரை பெற்றது போக) மீதமுள்ளதை விட்டு விடுங்கள் அவ்வாறு நீங்கள் நடந்துகொள்ள வில்லையாயின் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் யுத்தம் செய்ய சித்தமாகிவிடுங்கள். ஆயினும் நீங்கள் (வட்டியிலிருந்து) நீங்கிவிட்டால் உங்கள் செல்வத்தின் அசல் தொகை உங்களுக் குரியது. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது.
(அல்குர்ஆன் : 2 : 278, 279)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
‘அல்லாஹ் வட்டி உண்பவனையும் அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருக்கும் இருவரையும் அதனை எழுதுபவரையும் சபித்துள்ளான்.’
(புகாரி, முஸ்லிம்)
மேலும் நபிகளார் கூறுகை யில் :
‘வட்டி என்பது எழுபத்து மூன்று வாயில்களைக் கொண்டது. அதில் மிகவும் குறைந்த நிலை, ஒருவர் தனது தாயுடன் விபசாரம் செய்வதனைப் போன்றதாகும்.’
‘வட்டியாக அமையும் ஒரு வெள்ளி நாணயமானது அல்லாஹ்விடத்தில் முப்பத்தியாறு விபசாரத்தைவிட பாரதூரமாக அமையும்.’
(தாரகுத்னி, அஹ்மத்)
‘ஓர் ஊரில் வட்டியும் விபசாரமும் பரவிவிட்டால் அவ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்.’
(அல்ஹாகிம்)
வட்டியில் குறைந்த வட்டி, கூடிய வட்டி என்ற வித்தியாசம் கிடையாது. சிறிய, பெரிய அனைத்து வட்டி கொடுக்கல் வாங்கல்களும் ஹராமானதாகும்.
‘அல்லாஹ் வட்டியை ஒழித்துக்கட்டித் தானங்களைப் பெருக்குகிறான். மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை.’
(அல்குர்ஆன் : 2 : 275, 276)
– தினகரன்