– செல்வநாயகம்
(ஓய்வுபெற்ற அதிபர்)
ஒரு சில வளர்ந்தோராலும் பரீட்சை எழுதும் மாணவராலும் எழுதப்படும் எழுத்துக்கள் வெவ்வேறு வடிவங்களில் அமைந்து விடுவதால் வாசித்து விளங்க முடியாத நிலை காணப்படுகிறது. மாணவரின் விடைத்தாள் மதிப்பீட்டின் போது விடை தெரிந்தும் சரியான புள்ளியைப் பெறாது அவர்கள் பாதிப்படைவதையும் காணலாம். எழுத்தாற்றல் வேகம் தடைப்படும் போது குறிப்பிட்ட கால எல்லைக்குள் எழுத முடியாததால் நேரம் போதாது என மனதால் குமையும் மாணவரையும் காணலாம். எண்ணங்கள் கருத்தாகப் பேனை முனையில் வரிவடிவில் வெளிப்பட எழுத்தாற்றல் அவசியமானது.
மொழியின் வரிவடிவமே எழுத்தாகும். வெவ்வேறு மொழிகளின் வரிவடிவங்கள் நேர் கோடுகளாலும் வளை கோடுகளாலும் இவை கலந்தும் காணப்படுகின்றன. காலத்தால் மாறுபடாத இவ்வரிவடிவங்கள் துல்லியமாகக் காட்டப்படா விட்டால் மொழி மரபு சிதைவுறும். எனவே எழுதுபவரும் எழுதப் போதிப்போரும் வரிவடிவின் பின்வரும் நோக்கங்களைத் தம்மகத்தே கொள்ளல் வேண்டும்.
எழுத்தின் வரி வடிவு பற்றிய திருத்தமான மனப்பதிவு
வாசிப்பவர் எளிதில் புரியக்கூடிய எழுத்தமைப்பு
விரைவாக எழுத எழுத்தின் தொடக்கமும் முடிவும் சரியான திசையில் அமைதல்
கோட்டின் மேலும் கீழும் அமையும் பாகங்களை விளங்கி நேர் கோட்டில் எழுதுதல்.
ழுது கருவியின் அசைவுக்கு உகந்த விரல் அமைவு
உறுதியான கட்டடத்துக்கு தரம் வாய்ந்த அத்திவாரம் அமைவது போல் மொழியின் ஆரம்ப வரிவடிவங்கள் செம்மையாக அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். கையெழுத்துச் சரியாக அமைய தலை எழுத்து (மாணவர் பயிற்சி பெறும் முதல் எழுத்து) சரியாக அமைய வேண்டும். ஆரம்ப வகுப்பாசிரியர்களின் வழிகாட்டல் இதற்கு உறுதுணையாக அமையும். இவ்வாசிரியர்களின் பணியே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் ஆரம்ப வகுப்பாசிரியர்கள் தம் பணிக்குரிய நிலைப்பாட்டை மனதிலிருத்தி ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே அவதானத்திற்குட்படுத்த வேண்டும். இருபது, முப்பது மாணவரைக் கவனிப்பது சிரமமான காரியம் எனச் சலிப்படைவீர்களாயின் போற்றற்குரிய உங்கள் சமுதாயப்பணி வெறும் வேதனப் பணியாகிவிடும்.
குப்பறையில் பின்வரும் வேறுபாடுகள் கொண்ட மாணவரை அவதானிக்க முடியும். எழுத்துக்களை தலை கீழாகவும் இடம் வலமாகவும் மாற்றி எழுதுபவர்கள், ஒரே வரிவடிவத்தை பல எழுத்துக்களாகப் பாவிக்கும் மாணவர்கள், எழுத்துக்களின் குறில், நெடில் பேதங்களையோ சரியான ஒலி வடிவத்தையோ உணராத மாணவர்கள், எழுது கருவியைச் சரியாகப் பிடிக்காமல் எழுதும் போது கைச்சோர்வு அடைவதுடன் தாறு மாறாகச் சிதறும் எழுத்துக்களை எழுதும் மாணவர்கள், எழுதும் போது எழுத்துக்களின் சில பாகங்களை தமது வசதிக்கேற்ப உருமாற்றி எழுதும் மாணவர்கள் என்றெல்லாம் இவர்களை வகைப்படுத்தலாம். பயிற்சிப் புத்தகங்களைச் சரி பார்த்தால் மட்டும் இவற்றை இனங்காண முடியாது என்பதால் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே அவதானித்தல் உசிதமானது.
எழுத்துக்களைப் பற்றிய திருத்தமான மனப்பதிவு அமைய வேண்டும். ஙு, நு, ஹ, ஸ்ரீ, ஹ என்ற எழுத்துக்களின் ஒலி வடிவை திடீரென வரிவடிவமாக எழுத அனைவராலும் முடியாது. இதேபோன்று தான் ஏனைய எழுத்துக்களின் வரிவடிவங்களும் மனதிற் பதிய வேண்டும். இதற்கு வாசிப்பையும் பிரதி பண்ணலையும் பயிற்சிகளாக ஆரம்ப வகுப்புகளில் அடிக்கடி கொடுத்தல் பலன் தரும்.
மாணவர் தம்வசதிக்காகவும் சோம்பலுக்காகவும் சரியான வழி காட்டல் இன்மையாலும் எழுத்துக்களின் மரபு வடிவைத் திரித்து எழுதுதலைச் சாதாரணமாகக் காணலாம்.
சில மாணவர்கள் எழுத்தின் ஒரே வடிவத்தை பல எழுத்துக்களுக்கும் பாவிப்பர். அவர்கள் எழுதியதை அவர்களே வாசிக்கும் போது இடர்படுவதைக் காணலாம். இதனைத் திருத்த உறுப்பெழுத்துப் பயிற்சி அவசியமாகும்.
மிகக் கூடுதலான மாணவர் எழுத்துப் பிழை விடுவது குறில், நெடில் ஒலி பேதங்களை உணராமையாகும். உச்சரிப்பைப் பிழையாக மேற்கொள்வதே இதற்கான காரணமாகும். இதனைப் பெரும்பாலானோர் அவதானத்திற் கொள்வதில்லை. இதனால் அதிகமான சொற்பிழைகளை எதிர்பார்க்கலாம். முன்னைய காலங்களில் எழுத்துக்களைப் பெயர் வடிவில் கற்ற மாணவரிடம் இப்பிழைகள் காணப்படவில்லை. ஆனால் கற்றலை எளிதாக்க எழுத்துக்களை ஒலி வடிவாக கற்பிக்கும் புதிய கல்வி முறையால் இன்று எழுத்துப் பிழைகள் மலிந்து விட்டன. மாணவரின் சுமை குறைக்கும் ஒலி வடிவே மிகச் சிறந்த முறையாகும். எனினும் பிழை கல்விக் கொள்கையில் இல்லை. கற்பிப்போரே இதற்குக் காரணம்.
கற்பிப்போரில் ஒரு சிலர் அ, ஆ இரண்டையும் ஆ என்றும் கெ, கே இரண்டையும் கே என்றும் ஒலிப்பதால் பேதம் புரியாத மாணவர் காகம் என்பதைக் ககம் என்றும் தாயார் என்பதைத் தயார் என்றும் செம்பு என்பதைச் சேம்பு என்றும் துக்கம் என்பதைத் தூக்கம் என்றும் எழுதுவதைக் காண்கிறோம். குறுகிய ஒலி நீண்ட ஒலி என்பவற்றின் வேறுபாட்டைச் சரியான உச்சரிப்பின் மூலம் மாணவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு சொல்வதெழுதுதல் சிறந்த பலனைத் தரும்.
மேலும் திருத்தமான உச்சரிப்பின்மையால் ல, ள, ழ, ன, ண, ர, ற, பேதம் உணராது ஏதாவது ஒரு எழுத்தைச் சொற்களில் பிரயோகிப்பதால் சொற்பிழை விடுவதையும் அவதானிக்கலாம். மலையகத்தைப் பொறுத்தவரை இது பெரும் குறைபாடாகவே உள்ளது. சரியான ஒலி வடிவத்தை உச்சரிக்காது பெயர் வடிவில் குறிப்பிடும் வழக்கத்தைக் காணலாம். பிரதேசத்திற்குப் பிரதேசம் இது வேறுபடுகிறது.
“ல” என்பதைப் ‘பாம்பு லானா’ என்றும், ‘குண்டு லானா’ என்றும் ‘ஆங்கில லானா’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
“ள” என்பதை ‘கால் ளானா’ என்றும் கொம்பு ளானா’ என்றும் ‘சிங்கள ளானா’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
“ழ” என்பதை ‘மானா ழானா’ என்றும் ‘மவ்வளவு ழானா’ என்றும் ‘தமிழ் ழானா’ என்றும் குறிப்பிடுவர்.
“ன” என்பதை ‘இரண்டு சுளி னானா’ என்றும்,
“ண” என்பதை ‘மூன்று சுளி ணானா’ என்றும்
“ர” என்பதைச் ‘சின்ன ரானா’ என்றும்
“ற” என்பதைப் ‘பெரிய றானா’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதனால் மாணவரின் சுமை அதிகரிப்பதோடு மேற்படி எழுத்துக்கள் தொடர்பான மயக்க நிலையும் காணப்படுகிறது.
கற்பிப்போர் சரியான முறையில் உச்சரிப்பதன் மூலம் இச்சுமையைக் குறைக்கலாம். ர, ல, ன என்ற எழுத்துக்களை மேற்தாடைப் பற்களின் அடியில் நாக்கு பட உச்சரிக்கவும்; ற, ள, ண என்ற எழுத்துக்களை மேலண்ணத்தின் முற்பகுதியில் நா பட உச்சரிக்கவும்; ழ என்ற எழுத்தை மேலண்ணத்தில் சிறிது உட்புறமாக நா பட உச்சரிக்கவும் பயிற்சி அளித்தால் பெயர் சூட்டும் சிரமத்தைத் தவிர்க்கலாம்.
இதைவிட மிக மாறுபாடான உச்சரிப்புகளையும் மாணவரிடேயே அவதானிக்கலாம். ஃ என்ற எழுத்தை ‘அக்கண்ணா’ என்றும் ஞ் என்ற எழுத்தை ‘ஞ்சன்னா’ என்றும் ஒள என்பதை ‘ஒவ்வண்ணா’ என்றும் சை, கை, வை போன்ற எழுத்துக்களை செய்யன்னா, கெய்யன்னா, வெய்யன்னா என்றும் கெள என்பதைக் ‘கொவ்வன்னா’ என்றும் உச்சரிப்பதைக் காணலாம்.
இவ்வாறான பிழையான மனப்பதிவு கொண்ட மாணவரை மீட்டெடுக்க நீண்ட காலமாகலாம். இம்மனப்பதிவு இருக்கத்தக்கதாக ஒலி வடிவை எவ்வளவு தான் மீண்டும் மீண்டும் போதித்தாலும் மாற்றம் ஏற்படாது குழப்ப நிலையே காணப்படும். இவ்வாறான மாணவருக்கு முன்னைய போதனை முறையில் எழுத்துக்களின் பெயர் வடிவைக் கற்பித்தலே மாற்று வழி “க”னா “கா” வன்னா “கி”னா “கீ”யன்னா என்ற பெயர் வடிவைப் புகுத்தியே பிழையான மனப்பதிவை அகற்றலாம். ஆரம்ப வகுப்பாசிரியர்கள் சரியாகவும் தெளிவாகவும் ஒலி வடிவைப் புகுத்தியிருந்தால் இந்த இரட்டைச் சிரமம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஆரம்ப வகுப்பாசிரியர்கள் எழுத்துக்களை மட்டுமல்லாது இலக்கங்களையும் அவதானிக்க வேண்டும். பார்வைக்கு மாணவரின் இலக்கங்களின் வடிவம் சரியாக இருந்தாலும் அவற்றின் தொடக்கமும் முடிவும் அவர்களின் வேகத்திற்குத் தடையாக அமைகிறது.
பெரியவர்களாகிய நாம் நீண்ட நாட்கள் எழுதாமல் இருந்தால் திடீரென்று எழுதச் சிரமப்படுவோம். எழுத்துப் பயிற்சி பெற்ற தசை நார்கள் மாற்றடைதலே இதன் காரணமாகும். இதனால் தொடர் எழுத்துப் பயிற்சி இருக்க வேண்டியது அவசியமாகிறது. முன் பள்ளிகளில் இதற்கான அத்திவாரம் இடப்பட வேண்டும். செங்குத்துக்கோடு, கிடைக்கோடு, வளை கோடு, சுருளி உருக்கோடு போன்ற பயிற்சிகள் கைத்தசை நார்களை வலுவூட்டும்.
மாணவர்கள் சிறு பென்சில் துண்டை மூன்று விரல்களால் நசியப்பிடித்து எழுதுவதைக் காணலாம். இவர்களால் வேகமாக எழுத முடியாது. விரல் தசை நார்களும் பலவந்தப்படுத்தப்படுவதால் விரைவில் சோர்வடைவர். இதேபோன்று பேனையையும் பிடிப்பதால் அவர்களால் எழுதப்படும் எழுத்து அவர்களின் பார்வைக்கு விரல்களால் மறைக்கப்படுகிறது. மனப்பதிவில் உள்ள எழுத்தை ஏதோ ஒரு வடிவில் எழுதுவர். எழுத்துக்கள் மிகச் சிறியதாகவோ அன்றி மிகப் பெரியதாகவோ எழுதுவர். அவை நேர் கோட்டில் அமையாது மேலும் கீழும் அமையும். எழுது கருவியின் அசைவு சுயாதீனமாக இல்லாததால் எழுத்துக்கள் சிதறும். எழுதும் எழுத்து பார்வைக்குப் படாததால் தலையைத் தாழப் பதித்துக் கொண்டோ அல்லது எழுதுதாளை நேராக வைத்துக் கொள்ளாமல் வேறு திசையில் திருப்பி வைத்துக் கொண்டோ எழுதுவர். எழுதுதல் விரல்களுக்குரிய செயலாய் அன்றி முழு உடலையும் உபாதையாக்கும் செயலாய் அமைவதால் எழுத்து வேலையை வெறுப்பர்.
எழுது கருவி குறைந்தது பத்து சென்ரி மீற்றர் நீளமாக இருக்க வேண்டும். எழுதும் முனை விரல்களிலிருந்து இரு சென்றி மீற்றர் தூரத்தில் அமைய வேண்டும். எழுது கருவி முன் பின்னாக அசையக்கூடிய விதத்திலும் சமநிலை தவறாத விதத்திலும் பற்றப்பட வேண்டும்.
மாணவரின் சயாதீனமான உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தவும், சமூகப் பழக்கங்கள், சமூக உணர்வுகளை ஏற்படுத்தவும், தசை நார்களை உறுதி செய்யவும், நற்பழக்கங்களை உண்டாக்கவும், கலைகளை நயக்கவும், மாணவரைக் கற்றலுக்கு வழிப்படுத்தவும், முன்பள்ளிகள் நோக்காகக் கொண்டுள்ளன. அதற்கான பயிற்சியும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகின்றன. எனினும் போட்டி காரணமாக மூன்று மொழிகளையும் அவற்றுக்கான எழுத்துக்களையும் குழந்தைகளிடம் திணிக்கின்றனர். தாம் கற்பது எந்த மொழி என்று அறியாத குழவிகள் பாடசாலைக்குள் பாதம் வைக்கும் போது சிலவற்றைக் கட்டாயமாக மறக்க வேண்டி உள்ளது. எழுத்துக்களைப் பற்றி பயிற்சி ஆரம்ப வகுப்பாசிரியர்களுக்கே உள்ளது என்பதால் எழுத்துக்களைக் கற்பிக்கும் பணியை முன்பள்ளி ஆசிரியர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி பாடசாலைகள் அனைத்திலும் இக்குறைபாடுகள் இல்லாவிட்டாலும் சில பாடசாலைகள் இதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய கட்டாய தேவையுள்ளது.
–தினகரன்