இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் 24மணிநேர இணைய வானொலி இன்று ஆரம்பம் (எமக்குத் தெரியவேன்டிய தெரியாத விடயங்கள்)

125 வருட வானொலி வரலாற்றில் ஒரு மைல்கல். முன்னாள் முஸ்லிம் சேவையின் பணிப்பாளர்களது இருவட்டு வெளியீடு. சிங்கள சேவையில் முஸ்லிம் நிகழ்ச்சி வழங்கிய நால்வர்க்குப் பாராட்டு. முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்ஸன் சமரசிங்கவின் ஆதரவுடன் இணைய வானொலி முஸ்லிம் சேவை ஆரம்பமாவது பெரும் நம்பிக்கையளிக்கிறது. காரணம் ஜனாதிபதியின் பூரண ஆதரவும், ஆலோசனையும் தலைவர் ஹட்ஸன் சமரசிங்ஹவுக்கு உண்டு என்பதனால்.

ஐந்து நேர தொழுகை அஸான் ஒலிபரப்பையே ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதற்குரிய பூரண ஒத்துழைப்பை நல்கியமை கண்கூடு.

இப்பொழுது 24 மணிநேர இந்த இணைய வானொலி இலங்கை நேயர்களை விட வெளிநாடுகளில் வதியும் மக்கள் குறிப்பாக முஸ்லிம்களும், அல்லாதோரும் பயன்பெறலாம்.

தகவல் தொழிநுட்பத்தின் அசுர முன்னேற்றத்தில் ‘இணையம்’ கணனியுடன் அறிமுகம் பெரும் புரட்சியாகும். அது ஒலிபரப்பு என்று வரும்போது அது மறுமலர்ச்சியாகும். உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் உயர்வுக்கு நிச்சயம் இது வழிகோலும். எதிர்கால தகவல் தொழில்நுட்ப உலகம் இன்னும் எண்ணிலடங்காத வற்றை அறிமுகம் செய்யும் என்பதில் ஐயமில்லை.

18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி இன்றைய தகவல் தொழிநுட்ப வளர்ச்சியை எண்ணியிருக்கவே மாட்டார்.

ஆயின் 60 வருட வானொலி முஸ்லிம் சேவை ஒலிபரப்பின் ஒரு திருப்புமுனையாகவும் இந்த இணைய வானொலி முஸ்லிம் சேவையைக் குறிப்பிடல் வேண்டும்.

இதன் ஆரம்பகர்த்தா மர்ஹும் அல்லாமா கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள். 1952ல் ஒரு நாள் அப்போதைய சிங்கள சேவையின் பணிப்பாளர் வேர்னன் அபேசேகரவுடன் முஸ்லிம்களுக்குரிய ஐந்து நிமிட செய்தி அறிக்கையுடன் ஆரம்பிக்கிறார். 5 நிமிடம் 15 நிமிடமாகி 30 நிமிடமாகத் தமிழ்த் தேசிய சேவையில் வசதிக்கேற்ப அவ்வப்போது முஸ்லிம் நிகழ்ச்சி என்ற நாமத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

அடுத்ததாக செனட்சபை உரை பெயர்ப்பாளராகவும், காணி சீர்திருத்த சபையின் லிகிதராகவும் கடமையாற்றிய மர்ஹும் ஏ.எம். காமில் மரிக்கார் ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் முஸ்லிம் நிகழ்ச்சிக்கெனத் தனி பொறுப்பதிகாரியாகப் பதவியேற்றார். அதுவும் நிரந்தர அதிகாரியாக 1954 ஓகஸ்ட் 1ம் திகதி அவர் சேர்கிறார்.

முஸ்லிம் நிகழ்ச்சி மேலும் உற்சாகத்துடன் ஒலிபரப்பானது. அவருக்குப் பக்கபலமாக வெலிகாமத்தைச் சேர்ந்த பாரி அரபுக் கல்லூரியில் மெளலவித் தராதரம் பெற்ற அதே வெலிகாமம் புதுத்தெருவில் வசித்த இஸட்.எல்.எம். முஹம்மத் அவர்கள் வானொலியுடன் நிரந்தர அதிகாரியாகச் சேர்ந்தார்கள். மர்ஹும் காமில் மரிக்கார் அவர்களது பணிகளின் வெற்றிக்கு பக்கதுணையாக இருந்தவர்களுள் மெளலவி இஸட்.எல்.எம். முகம்மத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

இவ்வாறு வளர்ந்த முஸ்லிம் நிகழ்ச்சிப் பகுதி 1956ல் வானொலிக்குப் பொறுப்பான அமைச்சராக மர்ஹும் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களால் இரவு 8 மணி முதல் 9 மணிவரையான சேவையாகியது.

தமிழ்ச் சேவையின் நிரந்தர அறிவிப்பாளராக 1956ல் சேர்த்த தோப்பூர் வீ அப்துல்கபூர் அவர்கள் முஸ்லிம் சேவைப் பகுதிக்கு 1970 களில் இணைகிறார். அந்தக் காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசின் தகவல் ஒலிபரப்புத்துறைப் பிரதி அமைச்சராக இருந்த மூதூர் முதல்வர் எம்.ஏ.அப்துல் மஜீத் அவர்களது உதவியுடன் இன்னும் பல நியமனங்களும் பலவும் முஸ்லிம் நிகழ்ச்சிப் பகுதிக்குக் கிடைத்தன.

மர்ஹும் வி.ஏ. கபூர் வெற்றிடமான முஸ்லிம் பிரிவின் உயர் பதவிகளுள் பலவற்றை வகித்து முதல் முஸ்லிம் நிரந்தரப் பணிப்பாளரானார். இசை, நாடகத்துறைகளில் பிரபல்யம் பெற்ற மர்ஹும் M.H. குத்தூஸ் அவர்கள் வீ.ஏ. கபூரை அடுத்துப் பணிப்பாளரானார்.

பின்னர் மெளலவி இஸட்.எல்.எம். முகம்மத் 1997 வரை முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகி அவர் ஓய்வு பெற்றார். பயிற்சியாளராக வானொலியுடன் 1992ல் இணைந்த M.S.F ஹஸன் (நூராணியாஹஸன்) முஸ்லிம் சேவையினை வெற்றிகரமான கட்டுப்பாட்டாளர் பதவியைப் பெற்றுக்கொண்டார். மர்ஹும் ஆஸாத்மெளலானா மர்ஹும் எம்.எச்.எம். ஹனிஸ், மர்ஹும் M.M இர்பான் போன்றவர்களும் உயர்பதவி வகித்தவர்கள். அல்ஹாஜ் ரசீத் எம். ஹபீழ், குலாம்ரசீத், ஆயிஷா ஜுனைதீன் சேவையை அலங்கரித்தார்கள்.

மர்ஹும் எம்.எஸ்.எப். ஹஸன் அவர்களது பல்துறை திறமையை அறிந்த கூட்டுத்தாபன நிர்வாகம் தென்றல், விளையாட்டு மற்றும் சந்தைப்படுத்தல் பகுதிகளுக்குப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

வெற்றிடமாகிய முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் பதவிக்கு முப்பதாண்டுகளுக்கு மேல் ஒலிபரப்பு அனுபவமிக்க எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் நியமனம் பெற்றார். ஏற்கனவே ஒலிபரப்பு உதவியாளராகவும் செய்திப்பிரிவிலும் 1980 களில் முதல் கடமை வகித்து 1981ல் முஸ்லிம் சேவைக்கு மர்ஹும் பா.

கபூர் மூலம் சேர்த்துக்கொள்ளப்பட்ட எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் படிப்படியாகப் பல பதவிகள் வகித்து மக்கள் மத்திக்கு முஸ்லிம் சேவையை எடுத்துச் சென்றவர். தயாரிப்பாளர், அமைப்பாளர், அறிவிப்பாளர், சிரேஷ்ட அமைப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர், மேலதிகப் பணிப்பாளர் எனப் பதவிகள் வகித்துள்ளார். 2010 மார்ச் 2ம் திகதி தனது 55வது வயதில் பணிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற எம்.இஸட். அஹ்மத் முனவ்வர்க்கு தனது ஒலிபரப்புத் துறைப் பயணத்தை, பணியை முடித்துக்கொள்ள முடியவில்லை.

இன்றைய தலைவர் ஹட்ஸன் சமரசிங்க அவர்களும் நிர்வாகமும் இவரது சேவையைப் பெற நாடியது. மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசகர் பதவி பெற்றார். நூராணியா ஹஸன் மறைந்ததை அடுத்து சேவை முடித்திருந்த அஹ்மத் முனவ்வர் மீளவும் இதே வருடம் ஜூன் முதலாம் திகதி முதல் மீண்டும் பதவி வழங்கப்பட்டார். முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளின் இன்றைய பொறுப்பாளராக எஸ். முகம்மத் ஹனிபா கடமை பார்க்கிறார்.

ஏற்கனவே முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட ஆலோசகராக ஜனாதிபதியால் 2010 முதல் நியமிக்கப்பட்ட நுவரெலிய மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி ஹாஜி எம்.எம்.ஏ. கபூர் அவர்களது ஆலோசனைகளும் வழிகாட்டல்கள் மூலம் இணைய வானொலியின் உடன் அவசியம் அறியப்பட்டது. மர்ஹும் நூராணியா ஹஸனின் ஆதங்கத்திற்கு செயலுரு கொடுக்கும் வாய்ப்பு அஹ்மத் முனவ்வருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு தலைவர் ஹட்ஸன் சமரசிங்ஹ அவர்களின் பூரண ஒத்துழைப்பையும் அதிகா ரத்தையும் வழங்கியுள்ளார்.

இன்று ‘முகிழ்க்கும்’ 24 மணி நேர முஸ்லிம் சேவையின் இணைய முகவரி இது www.slbcserendib.lk பழைய பணிப்பாளர்கள் கூறும் வானொலி முஸ்லிம் சேவை வரலாறும் மர்ஹும் எம்.ஏ.முகம்மத் என்ற மாபெரும் மகத்தான கலைஞரின் பங்களிப்புகள் பற்றிய இறுவட்டு (CD) யை M.Z. அஹ்மத் முனவ்வர் கூட்டுத்தாபன தலைவரின் வழி காட்டலில் முன்னின்று வெளியிடுகிறார்.

மாத்திரமல்லாது 1954 முதல் சிங்களமொழி மூலம் முஸ்லிம் நிகழ்ச்சி உஹ்வதுல் இஸ்லாம்’ வழங்கிய நால்வர் பாராட்டப்படுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், அல்ஹாஜ் எம்.என். மிஃராஜ், ஓய்வுபெற்ற ஆசிரியைகளான ஜென்னத் தெkலா ஆப்தீன், ஹனீமா இஸ்ஹாக் ஆகியோரே பாராட்டப்படுகின்றனர்.

நிகழ்வுகள் வானொலி வர்த்தக சேவை மூலம் வழமையான முஸ்லிம் சேவையில் பிற்பகல் 2மணி முதல் அஞ்சல் செய்யப்படும். இஸ்லாமிய உலகு மட்டுமல்லாது முழுமனித குலமும் இந்த இணைய முஸ்லிம் சேவை மூலம் பூரண பயனைப் பெற வேண்டுமென்பதே எமது அவா. இறைவன் அருள்பாலிப்பானாக.

-தினகரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s