ரமளானும் அறியவேன்டிய விடயங்களும்….

-மௌலவி KLM. இப்றாஹீம் மதனி

 01 – ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு, முஸ்லிமான புத்தியுள்ள வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால் சிலருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியிருக்கிறது.

02 – ரமளான் மாதத்தின் சிறப்புகள்

1) ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ”நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)

3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ, அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ, அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி) 4) நோன்பு மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும். ஆகவே, நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹ் பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல் அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டதுதான் ரமளான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஒரு இரவு இருக்கின்றது, அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. இம்மாதத்தில் அல்லாஹ்வின் அருள் அதிகம் இறங்குகின்றது, இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது, இம்மாதத்தில் அல்லாஹ் பாவங்களை அதிகம் மன்னிக்கின்றான். ”யார் ரமளான் மாதத்தை அடைந்தும் பாவம் மன்னிக்கப்படாமல் மரணித்தானோ அவனை அல்லாஹ் (தன் அருளை விட்டும்) தூரமாக்குவானாக!” என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்ய, நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமீன் கூறினார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கியதுதான் இம்மாதம். ஆகவே, யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ, இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகமதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்கியருள்வானாக!

 03 – ரமளான் நோன்பின் சிறப்புகள்

1) ‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே’ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலால் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

விளக்கம்: வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்லது விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த இலாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தை கடைமயாக்குவதின் மூலமாக ”எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா” என்பதைச் சோதிப்பதற்கும்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக, மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரை, மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது, பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும், இவைகளை வெறும் சடங்குக்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற தூய எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)

தக்வா (இறையச்சம்) என்றால், அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றாக தவிர்ந்து நடப்பதாகும். ”தக்வாவின் உரிய தோற்றத்தை” நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும், பசியுள்ளவராக இருந்தும், தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ”இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்”. இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர், நான் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து, தொழ ஆரம்பித்து விடுவார். பாவங்களில் ஈடுபடக்கூடியவர், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து, அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில், ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஆகவே, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்ந்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீஸுல் குத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே” அது (நோன்பு) எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுக்கின்றேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ் (மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால்தான். எனவே, நோன்பு விடயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விடயங்களிலும், எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக..!

யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ, அதில் எந்தவித பயனும் இல்லை. ”யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி)

பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல், மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நற்செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு. ஏன் இந்த நற்பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நற்செயல்களில் ஈடுபட்டோமோ, அதே போன்று மற்ற மாதங்களிலும் ஈடுபடவேண்டும். அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மை கண்காணிப்பதில்லையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு, அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக…!

 04 – பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால் (அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்திற்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு, அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாட்களை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. ”மாதம் முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)05 –

05 – சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது

ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் சுன்னத்தான எந்த நோன்பையும் நோற்கக்கூடாது. இதற்கு சந்தேக நாட்கள் என்று கூறப்படும். ஆனால், திங்கள் மற்றும் வியாழக்கிழமையாகிய இரு நாட்களிலும் வழமையாக நோன்பு நோற்று வந்தவருக்கு, சந்தேக நாட்களிலும், சுன்னத்தான நோன்பு நோற்பதற்கு அனுமதி உண்டு.

06 – ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு

1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றவரல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் ஒரு அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

3) நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது ”வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்” இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே, அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை கடைபிடிப்போமாக!

 07 – ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸுப்ஹுடைய) பாங்கிற்கும் ஸஹர் உணவிற்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ் (ரலி) அவர்கள் கேட்டதற்கு, ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை, பிற்படுத்துவது சுன்னத்தாகும், அதாவது ஸஹர் உணவிற்கும் சுப்ஹுடைய பாங்கிற்;கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது சுப்ஹுடைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாது.

 08 – குளிப்பு கடமையான நிலையில் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹுடைய பாங்கிற்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பும் பரிபூரணமானதுதான். அதே போல் பகல் நேரத்தில் நோன்பு நோற்றவர் தூக்கத்தினால் குளிப்பு கடமையாகிவிட்டால், குளித்துக் கொண்டால் மாத்திரம் போதுமாகும். ஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும். அது நோன்பையும் முறித்துவிடும். அவ்வாறே ரமளான் மாதத்தின் பகல் நேரத்தில் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுவதும் நோன்பை முறித்துவிடும். அது பெரும் குற்றம் என்பதுடன் அந்த நோன்பை மீண்டும் நிறைவேற்றுவதுடன் குற்றப்பரிகாரமும் செய்ய வேண்டும். அதற்குரிய குற்றப்பரிகாரம், ஒரு அடிமையை உரிமையிடுவதாகும், அதற்கு முடியாவிட்டால் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் எனக்கூறினார். உம்மை அழித்தது எது? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியோடு நான் உடல் உறவில் ஈடுபட்டேன் என கூறினார். ஒரு அடிமையை உரிமை இட முடியுமா என (அம்மனிதரிடம்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக்கூறினார். இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க முடியுமா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை அமருமாறு கூறினார்கள் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பெரிய பேரீத்தம் பழக்கூடை நன்கொடையாக கொண்டுவரப்பட்டது. அதை (ஏழைகளுக்கு) தர்மமாக கொடுத்துவிடும்படி (அம்மனிதருக்கு) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மதீனாவின் எல்லைக்குள் எங்களைவிட வறுமையானவர்கள் யாருமில்லையென அம்மனிதர் கூறினார். (அதைக்கேட்ட) நபி (ஸல்) அவர்கள், அவர்களின் கோரைப்பல் தெரியுமளவு சிரித்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு, உன் குடும்பத்திற்கே உணவளி என்றார்கள். (திர்மிதி)

 09 – நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தர்மமாக அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)

1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர், நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு யுத்தத்திற்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்கு சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரை சூழ்ந்து, மக்கள் கூடியிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. (ஆதாரம்: நஸாயி)

4) நபி (ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில், நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ”நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்” எனக் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும் (அதாவது நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்;: நஸாயி)

6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி (ஸல்) அவர்கள் (மக்கா) சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

7) கோடைகாலத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். (சூட்டின் காரணமாக)ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவிற்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபி (ஸல்) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலூட்டும் தாய், நோன்பு நோற்;க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும், நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதுமாகும். இவர்கள் விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

 10 – நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) எத்தனையோ நோன்பாளிகள், அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, இப்னுமாஜா)

3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் ” நோன்பாளி ” என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பதல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போன்று, மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்பு நோற்றுக் கொண்டு, தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே, நோன்பு மாதத்திலும் நோன்பு அல்லாத மாதத்திலும் எல்லாத் தவறுகளையும் விட்டு, உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆனால் இன்று நோன்பு மாதத்தின் இரவு நேரத்தை வீணாக விழித்திருந்து சுப்ஹு தொழுகையின்றி தூங்கிவிடுபவர்கள் பலர். இவர்கள் பகல் நேரத்தை தூக்கத்திலேயே கழித்து, பல தொழுகைகளை பாழாக்கி விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமையாக்கியது, பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை பாழாக்குவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு, தொழுகைகள் மற்றும் பல நல் அமல்களைச் செய்வதற்குத்தான். ஆகவே, தவறுகளை முற்றாக விட்டு, தொழுகைகளையும் மற்ற எல்லா அமல்களையும் உரிய நேரத்தில் செயல்படுத்த நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!

……தொடரும்
(சுவனப்பாதை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s