நற்குணம்

உம்மு யாசிர் :

இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். இது வெறும் வணக்கம் மற்றும் மறுமையை பற்றி மட்டும் கூறக்கூடிய ஒரு மதமல்ல. மனிதனின் முழு வாழ்க்கை நெறிமுறைகளை கூறக்கூடிய ஒரு முழு வாழ்க்கைத் திட்டமாகும். எப்படி தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை மனிதர்களுக்கு கடமையாக்கி, அவைகளை செய்யும்படி ஆர்வம் ஊட்டுகின்றதோ அவ்வாறே நற்குணம் பற்றியும் மனிதர்களுக்கு ஆர்வம் ஊட்டுகின்றது. நற்குணத்தை முழுமைப்படுத்தவே நான் நபியாக அனுப்பப்பட்டிருக்கின்றேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாளை மறுமையில் மனிதர்களை அதிகம் சுவர்கத்தில் நுழைவிக்கக்கூடியது நற்குணம் என்றார்கள். நற்குணமுள்ளவர் இரவில் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பவரின் நன்மையை அடைந்து கொள்கின்றார் என கூறினார்கள். இவ்வாறு நற்குணத்தின் பக்கம் ஆர்வம் ஊட்டுகின்றது இஸ்லாம். நற்குணவாதிகளில் உதாரணப்புருஷராக விளங்கியவர்கள்தான் நமது தலைவர் நபி(ஸல்) அவர்கள்.

மனிதனுக்கு இருக்க வேண்டிய அத்தனை நற்குணங்களையும் பெற்றவராக நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். ஒருவர் சிறப்பான குணங்கள் அனைத்தையும் பெறவிரும்பினால் நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றினால் அதைப் பெற்றுக் கொள்ளமுடியும். முரட்டுத்தனம், கடுங்கோபம், சபித்தல், ஏசுதல் போன்ற எந்தவித கெட்ட குணங்களும் நபி(ஸல்) அவர்களிடம் இருந்ததில்லை. மாறாக அன்பு, பாசம், இரக்கம், அடக்கம், எளிமை போன்ற அனைத்து நற்குணங்களுமே அவர்களிடம் குடிகொண்டிருந்தன. அவர்களிடம் பத்து வருட காலம் பணிபுரிந்த
அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பற்றி கூறும்போது, நான் பத்து வருடம் நபி(ஸல்) அவர்களுக்கு பணிபுரிந்திருக்கின்றேன், ஒருபோதும் என்னை அவர்கள் “சீ” என்றுகூட கூறியதில்லை, நான் செய்த வேலையை பார்த்து நீ ஏன் செய்தாய் என்றோ, நான் செய்யாத வேலையை பார்த்து நீ ஏன் செய்யவில்லையென்றோ கேட்கவில்லை என்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

ஒன்றிரண்டு நாட்களல்ல, பத்து வருடங்கள் பணிபுரிந்தும் இச்சான்றை ஒரு ஊழியர் கூறுவதாக இருந்தால் இம்மாமனிதரின் நற்குணத்தை பற்றி எப்படி புகழ்வது.

நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் பல தொல்லைகள் கொடுத்த போது, நபித்தோழர்களில் சிலர் அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யும்படி கேட்ட போது, நான் சபிப்பவனாக அனுப்பப்படவில்லை, அருளுக்குரியபவராகவே அனுப்பப்பட்டிருக்கின்றேன் என்றார்கள். ஒரு முறை மஸ்ஜிதுன் நபவியில் ஒருகிராமவாசி சிறுநீர் கழித்தார், இதைக்கண்ட நபித்தோழர்கள் அவரை அடிக்க முயன்றபோது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்றார்கள். அவர் முழுமையாக சிறுநீர் கழித்துமுடித்தபிறகு அந்த இடத்தில் ஒரு வாளித்தண்ணீரை ஊற்றும்படி கூறினார்கள். பின்பு நீங்கள் (மக்களிடத்தில்) இலகுவாக நடக்கும்படியே அனுப்பப்பட்டுள்ளீர்கள், கஷ்டம் கொடுப்பவர்களாக அனுப்பப்படவில்லை என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இறைவனை வணங்குமிடத்தில் சிறுநீர் கழித்தவருடனும் அவர்கள் நடந்துகொண்ட முறையை பாருங்கள். இவ்வளவு நற்குணம் படைத்தவர்கள்தான் நபி(ஸல்) அவர்கள். துமாமா அபூ அல் பாஹிலி என்னும் போர்கைதி மஸ்ஜிதுன்நபவியில் கட்டப்பட்டுக் கிடக்கின்றார், அவரை மூன்று நாட்கள் விசாரித்த பின் விடுதலை செய்கின்றார்கள். மூன்று நாட்களும் நபி(ஸல்) அவர்கள் அவருடன் நடந்து கொண்ட முறையை அவர் பார்த்ததும் அவரை அது எப்படி மாற்றியது என்பதை அவரின் வாக்கு மூலமே சொல்லும். விடுதலை செய்யப்பட்ட அவர் நேராக மஸ்ஜிதுன் நபவிக்கு பக்கத்திலுள்ள ஒரு தோட்டத்தினுள் சென்று குளித்துவிட்டு வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும் நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன் என்ற ஷஹாதாவை மொழிந்தார். பின்பு தொடர்ந்தும் அவர் கூறுகின்றார், உலகத்திலுள்ள அனைவரை விடவும் நபி(ஸல்) அவர்கள் என்னிடத்தில் மிகவும் வெறுப்புள்ளவராக இருந்தார், ஆனால் இப்போது உலகத்திலுள்ள அனைவரை விடவும் நபி(ஸல்) அவர்கள் என்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர், உலகத்திலுள்ள எல்லா மார்க்கத்தை விடவும் இஸ்லாமிய மார்க்கம் என்னிடத்தில் மிகவும் வெறுப்புக்குரியதாக இருந்தது, ஆனால் இப்போது இஸ்லாமிய மார்க்கம் என்னிடத்தில் மிகவும் விருப்பத்திற்குரிய மார்க்கமாகும், உலகத்திலுள்ள எல்லா இடங்களை விடவும் மதீனா எனக்கு மிகவும் வெறுப்புக்குரியதாக இருந்தது, ஆனால் இப்போது உலகத்திலுள்ள அனைத்து இடங்களை விடவும் மதீனா எனக்கு மிகவும் விருப்பத்திற்குரிய இடமாகும் என்றார். நபி(ஸல்) அவர்களையும், இஸ்லாத்தையும், மதீனாவையும் உலகத்திலுள்ள அனைத்தை விடவும் வெறுத்தவர் உலகத்திலுள்ள அனைத்தைவிடவும் இம்மூன்றையும் நேசிக்கக்கூடிவராக மூன்றே மூன்று நாட்களில், அவரை மாற்றியது, நபி(ஸல்) அவர்கள், அவரிடத்தில் காட்டிய நேர்மையான விசாரணை, உபசரிப்பு, மென்மை, அழகிய பண்பாடு போன்றவைகளைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?

அனைவரிடத்திலும் நற்குணம்காட்டி கைதியையும் பகைவரையும் வென்றார்கள் இம்மாமனிதர்(ஸல்) அவர்கள் தான். இதனால்தான் அல்லாஹுவும் திருமறையில் நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து கூறுகின்றான். நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (68:4)

எனவே நாமும் குணத்தால் சிறந்தவராக விளங்கவேண்டும். அடுத்தவர்களிடம் அன்புடனும் மென்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதனால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை உலகிற்கு பறைசாற்ற முடியும். இப்படிப்பட்ட நற்குணங்களை பெற்றவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s