விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவே! ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.

இறைமொழியும் நபிமொழியும் :

தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)

நான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது, ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஸம்ஸம் தண்ணீரால் அதைக்கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள். (புகாரி)

நீண்ட அறிவிப்பும் நிறைந்த நன்மைகளும்

புராக்கை என்னிடத்தில் கொண்டு வரப்பட்டது – அது நீளமான வெள்ளை நிறமுள்ளது, (அதன் உயரம்) கழுதையை விட உயரமானதும் கோவேறு கழுதையை விட சிறியதுமான ஒரு மிருகமாகும், அதனுடைய பார்வை படும் தூரத்திற்கு அது காலடி வைக்கும் – பைத்துல் முகத்தஸ் வரைக்கும் அதில் நான் ஏறிச்சென்றேன். நபிமார்கள்; (ஏறிச்செல்லும்) வாகனங்களைக் கட்டும் கதவின் துவாரத்தில் அதைக்கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். (தொழுது முடிந்ததும்) ஜிப்ரஈல் (அலை) அவர்கள் மது உள்ள பாத்திரத்தையும் பாலுள்ள பாத்திரத்தையும் என்னிடம் கொண்டு வந்து (அவ்விரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள், நான் பாலுள்ள பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன், இயற்கையை (இஸ்லாத்தையும் உறுதிப்பாட்டையும்) தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.

ஆதி பிதாவும் ஆரம்ப வானமும்

பின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார்? எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரஈல் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார்? எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா? என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டாம் வானமும் இறைதூதர் இருவரும்

பின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு இரண்டாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் பெரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

மூன்றாம் வானமும் அழகு நபிச்சிகரமும்

பின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (மூன்றாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு மூன்றாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப் பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

நான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)

பின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (நான்காவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள் (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (நான்காம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)

பின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஐந்தாவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (ஐந்தாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஹாரூன் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஆறாம் வானத்தில் அருமை மூஸா (அலை)

பின்பு ஆறாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஆறாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. அப்போது எங்களுக்கு (ஆறாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே மூஸா (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஏழாம் வானத்தில் நபி இப்றாஹீம் (அலை)

பின்பு ஏழாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஏழாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். அப்போது எங்களுக்கு (ஏழாம்;) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும் அங்கே வருவதில்லை.

சீரழகுச் சூழலாய் சித்ரத்துல் முன்தஹா

பின்பு சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு என்னைக் கொண்டு சென்றார்கள், அந்த (மரத்தின்) இலைகள் யானையின் காதுகளைப்போன்றும் அதனுடைய பழங்கள் பெரும் குடமுட்டிகளைப்போன்றும் இருந்தது. அல்லாஹ்வின் அருள் அதனைச் சூழ்ந்திருந்த காரணத்தினால் அதன் நிறமே மாறியிருந்தது. அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் அதன் அழகை வர்ணிக்கமுடியாது.

இறைத்தூதுச் செய்தியும் கண்குளிர்ச்சித் தொழுகையும்

அல்லாஹ் எனக்கு வஹீ அறிவிக்க நாடியதையெல்லாம் வஹீ அறிவித்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.

ஐம்பதிலிருந்து ஐந்து வரை

(அதன்பிறகு) மூஸா (அலை) அவர்கள் இருக்கும் (வானம்) வரை நான் இறங்கி வந்தேன், உமது உம்மத்துக்கு உமது இறைவன் எதனைக்கடமையாக்கினான்? என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே! தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்துவிடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்துவிட்டான் எனக்கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள்; ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே! ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகைகள் தொழ வேண்டும், ஒரு நேரத் தொழுகைக்கு பத்து நேரத் தொழுகை தொழுத நன்மைகள் கிடைக்கும். ஐந்து தொழுகைக்கும் ஐம்பது தொழுகையின் நன்மை கிடைக்கும் என அல்லாஹ் (எனக்கு) சொல்லும் வரை உயர்ந்தவனாகிய எனது இரட்சகனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் மத்தியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும், யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு பத்து நன்மைகளும் கிடைக்கும், யார் ஒரு பாவம் செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவர் குற்றம் செய்ததாக எழுதப்படமாட்டாது, யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு ஒரு குற்றம் மாத்திரமே எழுதப்படும். மூஸா (அலை) அவர்கள் (இருக்கும் வானம்) வரை நான் இறங்கி வந்து நடந்ததைக் கூறினேன். உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். என் இரட்சகனிடம் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)

நபியவர்கள் விண் வெளிக்கு சென்றது நபித்துவத்திற்கு ஒரு பெரும் அத்தாட்சி

விண்ணை முட்டிடும் விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றைய அறிவியல் எட்டினாலும் வானத்தை எட்டிப்பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை, ஆனால் விஞ்ஞானத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இரவின் ஒரு சிறு பகுதியில் ஏழு வானங்களையும் கடந்து சென்று வந்தது அவர்கள் இறைத்தூதர் என்பதற்கு மிகப்பெரும் அத்தாட்சியாகும்.

ஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்

அன்புள்ள சகோதர சகோதரிகளே! – இதுவரைக்கும் இஸ்ரா-மிஃராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும், அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். மிஃராஜ் என்பது ஏழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஜ் என்பது ஹதீதில் மாத்திரம் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக்கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.

1- நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம். (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்)

2- நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்கு பின். (இதை நவவி , தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்)

3- நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்கு பின் ரஜப் மாதம் பிறை 27ல். (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்)

4- நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 16 மாதங்களுக்கு முன்)

5- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 14 மாதங்களுக்கு முன்)

6- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்)

இஸ்ரா, மிஃராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. அது எப்போது நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை, காரணம் ஒரு நாளை அல்லது ஒரு மாதத்தை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்குப்பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜுக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம்; மார்க்கமாக முடியும்? இன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும் பாவமாகும்.

மார்க்கம் என்கிற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்தில் நல்லது கெட்டது என்று பிரிக்க முடியாது. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுதான். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.

ஹதீதின் பகுதி : இஸ்லாத்தில் புததிதாக ஒன்றை உருவாக்குவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸில்ஸிலா ஸஹீஹா)

நஸாயியின் அறிவிப்பில்: ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும். என்று வந்திருக்கின்றது.

காரியங்களில் மிகக்கெட்டது இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்ததகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)

யார் எமது மார்க்த்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில் :-

யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.

1-அல்லாஹ்வுக்காக அந்த வணக்கம் செய்யப்பட வேண்டும்.

2-நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவே! ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.

படிப்பினை தரும் தொழுகை

மிஃராஜ் மூலமாக தொழுகை மிக முக்கியமான வணக்கம் என்பதை நாம் தெரிந்து அதை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதாவது அல்லாஹ் எல்லா வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போது வஹீ மூலமாக கடமையாக்கினான், ஆனால் தொழுகையை ஏழு வானங்களுக்கும் மேல் தன் நபியை அழைத்து அங்கே ஐம்பது நேரத் தொழுகையாக கடமையாக்கி பின்பு அதை ஐந்தாக குறைத்து இந்த ஐந்துக்கும் ஐம்பது நேரத் தொழுகையின் நன்மைகளை வாரி வழங்கி நம்மீது கருணை காட்டியிருக்கின்றான். இந்த ஐந்து நேரத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றும் மக்கள் மிகவும் குறைவானவர்களே. ஆகவே ஜங்காலத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி பித்அத்துக்கள், தடுக்கப்பட்டவைகள் போன்ற எல்லாத் தவறுகளையும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டு ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக…

صلى الله على سيدنا محمد و على آله وأصحابه و سلم، والحمد لله رب العالمين

-Suvanam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s