பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் விடயம் தொடர்பாக தற்போதைய முறையை மீள் பரிசீலனை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும்.
இது தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்புக்கு ஏற்ப, ஆலோசிப்பதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விசேட அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
புதுவருடத்துக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து அவர்களால் முறை ஒன்றும் வகுக்கப்பட்டது. பழைய, புதிய சிபார்சுக ளின் கீழ் பல்கலைக்கழக பிரவேசத்துக்காக “இஸட்கோர்” முறை அறி முகப்படுத்தப்பட்டது. இதன் பிரகாரம் தற்போது பணிகள் முன்னெ டுக்கப்படுகின்றன.
இந்த முறை தொடர்பாக பரஸ்பர எதிர் கருதுக்கள் உள்ளதாகவும், இது பற்றி மீள்பரிசீலனை செய்வது பொருத்தமானது என்றும் ஜனாதிபதி பலமுறை என்னிடம் பிரஸ்தாபித்துள்ளார். வேறு தரப்பினரும் இந்த முறை தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதில் எமக்கு தற்போது அவதானமும் திரும்பியுள்ளது.
இவ்விடயமாக பலதரப்பினராலும் தெரிவிக்கப்பட்டு உள்ள யோசனைகளை நான் கவனத்திற் கொண்டுள்ளேன்.
எந்த மாணவருக்கும் அநீதி இழைக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க செயற்பாடுகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டுள்ளார். வாழ்வில் தீர்க்கமான ஒரு சந்தியில் மகத்தான போட்டி பரீட்சையில் தோற்றி அதில் சித்தியுறும் எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது. அநீதி இன்றி மாணவர்களை பல்கலைக்கழக பாட நெறிகளுக்காக தெரிவு செய்வது எமது மாபெரும் பொறுப்பாகும். எனவே, இவ்விடயமாக மீள் பரிசீலனை செய்ய விசேட நிபுணர்கள் குழுவொன்றை மீண்டும் நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். இவ்வாறு உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-Thinakaran