பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டும் திறனை நிரூபிப்பதென்றால் அலாதிப்பிரியம். அவ்வாறானவர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதற்குத் தேர்ந்தெடுப்பது 18 கொண்டை ஊசி வளைவுகளை.
கண்டியையும் மஹியங்கனையையும் இணைக்கும் 18 கொண்டை ஊசி வளைவு கொண்ட வீதி, அனேக சாரதிகளுக்கு, மிகச் சவாலான அனுபவத்தைத் தந்திருக்கிறது. அனுபவம் இல்லாத சாரதிகள் இப்பாதை வழியாகச் செல்லவே விரும்புவதில்லை. காரணம் அதன் குறுகல் தன்மையும் அங்கிருந்து கீழே நோக்கினால் தெரியும் அதளபாதாளமும்.
1990 ஆம் ஆண்டில் ரஜமாவத்தை அமைக்கப்படுவதற்கு முன்பதாக சுமார் ஒன்றரை தசாப்தங்களாக, கண்டி, பதியத்தலாவ என்பனவற்றை இணைக்கும் திகன, தெல்தெனிய மெதமஹாநுவர, உன்னஸ்கிரிய போன்ற கண்டி மாவட்டத்தின் அழகு கொழிக்கும் இடங்களையும் ஊவா மாகாணத்தின் பசறை, மஹியங்கனை என்பவற்றை இணைக்கும் பாதையாகவும் இருந்தது இந்த 18 கொண்டையூசி வளைவே. பாதை குறுகலானதாக பயங்கரமானதாக இருந்தாலும், இதனூடாகச் செல்லும் உல்லாசப் பயணிகளும் சிறார்களும் வளைவுகளை ஒவ்வொன்றாக எண்ணிச் செல்வதோடு அதன் உச்சியில் இறங்கி இயற்கை அழகை இரசிக்கவும் தவறுவதில்லை. 18 வளைவுகள் எனக் கூறப்பட்ட போதும் அவ்வீதியின் ஒரு பகுதி அகலமாக்கப்பட்டதால் உண்மையில் தற்போது 17 வளைவுகளே அங்கு உள்ளன.
ஏ-26 வீதியான இது ஒன்றரை தசாப்தகால பழைமை வாய்ந்தது. 1928 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரிசினால் அமைக்கப்பட்ட 18 வளைவு கொண்ட இவ்வீதி, மத்திய மலைநாட்டை ஊவா மாகாணத்துடன் இணைத்து மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவியிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோட்டத்துரைமார் தங்களது உற்பத்திகளை கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டதுதான் என்றாலும், பழங்காலம் முதலே இப்பாதை வழியே பயணம் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
கண்டியில் இருந்து புறப்பட்டால், உடதும்பர, நிசருவ, கோவில்மட, தவளந்தென்ன மற்றும் தம்மிட்டியானா என்பன கடந்தவுடன் 18 வளைவு கொண்ட பாதை வருகின்றது.
18 வளைவுகளையும்கடந்தால் வருவது, ஹசலக்க, வேரகம, வேரா கந்தோட்டை பின் மஹியங்கனை. இவ்வீதி மிகக் குறுகலானதாகவும், மேடு பள்ளம் நிறைந்ததாகவும் இருந்ததால் வாகனம் நல்ல நிலையில் இல்லாவிட்டால் இவ்வீதியில் பயணிப்பது மிகவும் சிரமமானதாக இருந்தது. காரணம், வாகனம் பழுதுபட்டு வீதியில் நின்று விட்டால் தொடர்ந்து வரும் வாகனங்கள் எல்லாம் வரிசையாக நிற்க வேண்டியிருக்கும்.
இவ்வளவு தடங்கல்கள் இருந்த போதும் மஹியங்கனையில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு டிரக்குகள் மூலம் மணல் மற்றும் செங்கற்கள் ஏற்றிச் செல்லப்படும் பிரசித்த மார்க்கம் இதுதான். நாளொன்றுக்கு இவ்வாறான 800 டிரக் வண்டிகள் மணல் மற்றும் செங்கற்கள் ஏற்றி இவ்வழியினூடாகச் செல்கின்றன.
இவ்வீதி 3 முதல் 5 மீற்றர் அகலமே கொண்டதாகவும், பல இடங்களில் மிகவும் குறுகலானதாகவும் இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக வாகனங்கள் வந்த வழியே கீழிறங்க வேண்டிய நிலையும் இருந்தது.
மாற்று வழியாக ராஜ மாவத்தை இருந்த போதும் மக்கள் அதிகளவில் இதனையே பயன்படுத்தினர். அதனால் இவ்வீதியை புனரமைக்க வேண்டிய தேவை அரசுக்கு எழுந்தது. குறிப்பாக 17 வளைவுகள் கொண்ட பகுதியை புனரமைப்பது அவசரத் தேவையாக இருந்தது.
அதனால், உடதன்ன முதல் மஹியங்கனை வரையான 31.3 கிலோ மீற்றர் நீளமான பகுதியையும் மஹியங்கன முதல், பதியத்தலாவ வரையான 72.1 கிலோ மீற்றர் நீளமான
பகுதியையும் புனர் நிர்மாணிக்க வேண்டிய தேவை உணரப்பட்டது.
அவ்வழியே பயணிப் போரின் பாதுகாப்புக் கருதியும் பயணத்துக்கான நேர விரயத்தைக் குறைக்கும் முகமாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு 5,000 மில்லியன் ரூபாய் செலவில் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற இலக்கோடு 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகின. மண்ணரிப்பைத் தடுப்பதற்காக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதோடு வீதியோரமாக பாதுகாப்பு வேலிகளும் இடப்பட்டுள்ளன.
வீதி அகலிப்பு காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, புதிய தோற்றப் பொலிவோடு 18 வளைவுகள் கொண்ட வீதி அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு குறைபாடுகளுடன் இருந்த இப்பாதை திருத்தப்பட்டதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு இதுகாலவரையில் இருந்த மற்றுமொரு தடைக்கல் நீக்கப்பட்டுள்ளது.
–தினகரன்