– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :
பிறருக்காக செய்யும் துஆவின் சிறப்புகள் : எந்த ஒரு முஸ்லிமான அடியார், தம் சகோதரருக்காக மறைவில் (அவர் முன்னிலையில் இல்லாதபொழுது) துஆச் செய்கிறாரோ, அப்பொழுது அவருக்கு ஒரு மலக்கு, நீர் அவருக்காக கேட்ட நலவான விஷயங்கள் போன்றவை உமக்கும் உண்டு என்று கூறுவாரே தவிர வேறில்லை. (முஸ்லிம்) ஒரு முஸ்லிமான மனிதர், தம் சகோதரருக்காக மறைவில் செய்யும் துஆ ஒப்புக் கொள்ளப்பட்டதாகும். துஆச் செய்யும் அம்மனிதரின் சிரசின்(தலை) அருகில் ஒரு மலக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பார். அவர் தம் சகோதரருக்கு நலவானதைக் கேட்டு துஆச் செய்யும் போதெல்லாம் அம்மலக்கு ஆமீன் உமக்கும் அதுபோன்ற நலவானது உண்டு என்று கூறுவார். (முஸ்லிம்)
துஆவின் சில சட்டங்கள்
யார் ஒருவருக்கு ஒரு நன்மை செய்யப்பட்டு, அவர் அந்நன்மை செய்தவருக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
جَزَاكَ الله خَيْرًا
அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக என்று கூறுகிறாரோ, அவர் அவரை அதிகமாகப் புகழ்ந்துரைத்து(நன்றி கூறி)விட்டார். (திர்மிதி)
உங்களுக்கு, நீங்களே கேடாக(கெட்ட)துஆச் செய்ய வேண்டாம். உங்களின் பிள்ளைகள் மீது கேடாக துஆச் செய்ய வேண்டாம். உங்கள் பொருள்கள் மீது கேடாக துஆச் செய்ய வேண்டாம்.(ஏனெனில்) நீங்கள் எதனைக் கேட்டாலும், அல்லாஹ் உங்களுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் ஒரு நேரத்திற்கு நிங்கள் நேர்பட்டு விட வேண்டாம்.(அந்நேரத்தில் நீங்கள் என்ன துஆக் கேட்டாலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விடும்) (முஸ்லிம்)
ஓர் அடியான் தன் ரப்புடன் மிக நெருக்கமாக இருக்கும் நிலை, அவன் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது தான். ஆகவே ஸஜ்தாவில் அதிகமாக துஆக் கேளுங்கள். (முஸ்லிம்)
உங்களில் ஒருவர் அவசரப்படாத காலமெல்லாம், அவருடைய துஆ ஒப்புக் கொள்ளப்படும். (அவசரப்படுவது எப்படியெனில்) நான் என் ரப்பிடம் துஆச் செய்தேன். (ஆனால் இதுவரை) அதனை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுவதாகும். (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில், பாவத்தைக் கொண்டோ, உறவைத் துண்டிப்பது கொண்டோ, துஆச் செய்யாத காலமெல்லாம், மேலும் அவசரப்படாத காலமெல்லாம், ஓர் அடியானின் துஆ ஒப்புக் கொள்ளப்பட்டு வரும். அவசரப்படுவது என்றால் எவ்வாறு? என நபி(ஸல்)அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான் துஆச் செய்தேன், நான் துஆச் செய்தேன் (ஆனால்) அது ஒப்புக் கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை என்று அடியான் கூறிவிட்டு, கைசேதமும், கவலையும் அடைந்து துஆச் செய்வதை விட்டு விடுவதுதான் அவசரப்படுவது எனக் கூறினார்கள், என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த துஆ அல்லாஹ்விடம் மிக ஒப்புக் கொள்ளப்படும்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள் கடைசி இரவின் நடுப்பகுதியில் கேட்கப்படும் துஆ, பர்ளான தொழுகைக்குப் பின்னால் கேட்கப்படும் துஆ ஆகியவை மிக ஒப்புக் கொள்ளப்படும் துஆக்களாகும் என கூறினார்கள். (திர்மிதி)
-Suvanam