நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய எங்கள் உயிரிலும் மேலான  நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் உபதேசம் அவர்கள் எங்களுக்கு வாழ்ந்துகாட்டிய வழிமுறையின் சாராம்சத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஜித்தாவில் இருந்து வெளிவரும் ‘சுவனப்பாதை மாத இதழ்’ வருடா வருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தும் எழுத்துப் புரட்சிப் போட்டியில் ஆறுதல் பரிசை வென்ற இக்கட்டுரை காலத்தின் தேவை கருதி எமது வாசகர்களுக்காகப் பதிவேற்றப்படுகிறது.

எம்பெருமானார்(ஸல்) அவர்களின் முதல் மற்றும் இறுதி ஹஜ்ஜின் போது அராபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்கள் மத்தியில் தன் மரணத்திற்க்கு முன்பு  துல்ஹஜ்ஜின் 9வது நாள்  ஹிஜ்ரி 10ம் வருடம் (கிபி 632) ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைதான் நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை என்று அழைக்கப்படுகிறது. இவ்வுரையில் நபி(ஸல்) அவர்கள் தமது நபித்துவ பணியில் தான் போதித்த ஏறக்குறைய அனைத்து போதனைகளையும் இப்பேருரையில் குறிப்பிட்டார்கள். அவற்றினை அறிந்துக்கொள்வதும், கடைப்பிடிப்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாக இருக்கிறது. அவற்றினைக் காண்போம்.

பேருரையின் துவக்கம்:

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.

(ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

மேற்கூறியவாறு நபி(ஸல்) கூறிய போதே அடுத்த வருடம் பாசத்திற்குரிய இறைத்தூதர்(ஸல்) நம்மைவிட்டு பிரிந்துவிடுவார்களோ என்ற பயத்தினால் சஹாபாக்களின் கண்கள் கலங்க துவங்கின.

பிறப்பால் வேறுபாடு காட்டாதீர்:

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.

(அல்பைஹகீ)

பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.

தலைமைக்கு கட்டுப்படுவீர்:

தற்போதைய குழப்பம் நிறைந்த  இவ்வுலகில் இவ்வறிவுரை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கருப்பு நிறத்தவரின் தலைமையை ஏற்க மேற்கத்திய உலகம் மறைமுகமாக மறுத்து வருவதற்கும், வேற்று மொழியைச் சார்ந்தவர் தம்மை வழிநடத்துவதற்கு மறுப்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவுரையை கூறினார்கள்.

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.

(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

மிகவும் தெளிவான மற்றும் அவசியமான அறிவுரையாகும். உலகில் காணப்படும் அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முற்றுபுள்ளி வைப்பதற்கு இந்த அறிவுரையினை பின்பற்றினாலே போதுமானது.

பணியாளர்களைப் பேணுவீர்!

முதலாளித்துவ கொள்கையினை ஏறக்குறைய அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக காணப்படும் முதலாளிகளின் ஆதிக்கத்தினால் தொழிலாளிகளின் உரிமைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிட்டது. முதலாளிகளின் கை ஓங்கி இருப்பதன் விளைவு தொழிலாளிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக போராடுவது நசுக்கப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இதுபற்றி தம் இறுதிப்பேருரையில் இவ்வாறு மிக தெளிவாக தெரிவித்துவிட்டார்கள்.

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

(தபகாத் இப்னு ஸஅது)

அநீதம் அழிப்பீர்!

உலகில் இன்று காணப்படும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் அடிப்படைக் காரணமான வட்டியின் கொடூர முகத்தினைக்கண்டு உலகம் மிகுந்த அச்சம் கொள்கிறது. வட்டியின் கொடூரத்தினால் தினம் தினம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ பல ஆயிரங்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று தற்கொலை என்ற முடிவிற்கு செல்வதற்கு வட்டியின் கொடூரமே காரணமாக இருக்கிறது. இத்தகைய வட்டியினை இஸ்லாம் அடியோடு தடுத்துவிட்டது. இதை பற்றி நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிபேருரையில் இவ்வாறு கூறினார்கள்.

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமி,1789)

உலகையே பல வருடங்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்ற கொடிய நோயின் முதற்காரணமான விபச்சாரத்தினை பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். விபச்சாரத்தலிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று  அறிவுருத்தியிருக்கிறார்கள். விபச்சாரத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்ததின் விளைவினை மேற்கத்திய உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. விபச்சாரம் என்ற அருவருப்பான செயலினை இஸ்லாம் அறவே தடுத்துவிட்டது.

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமி, 7880

இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது. இஸ்லாத்தில் பெண்களூக்கு சுதந்திரம் இல்லை என்ற மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் பொய் பிரச்சாரத்தினை முறியடிக்க நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவுரையானது போதுமானதாக இருக்கிறது. இஸ்லாம் வழங்கியது போன்று உலகில் வேறு எந்த மதமோ கொள்கையோ பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும், கெளரவத்தையும் வழங்கிடவில்லை. பெண்களை ஆடை இல்லாமல் பொது இடங்களூக்கு வருவதற்கு அனுமதிப்பதுதான் பெண்களூக்கு வழங்கும் சுதந்திரம் என்ற மேற்கத்திய ஊடகங்களின் கூற்றினை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்தார்கள். பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் தெளிவாக கூறிவிட்டார்கள்.

இரண்டைப் பின்பற்றுவீர்!

இஸ்லாத்தின் அடிப்படையான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதையும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் மற்றும் அல்லாஹ்வின் உண்மை அடியான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதுமாகும். இவ்விஷயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இதையே எம்பெருமானார்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையிலும் குறிப்பிட்டார்கள்.

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

சொர்க்கம் செல்ல வழி!

ஒவ்வொரு மனிதருக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே இருக்குமேயானால் பின்வரும் எம்பெருமானார்(ஸல்) அவர்களின் அறிவுரையினை மிகவும் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும்.

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576,)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டத்திட்டங்கள் இன்றோடு நிறைபெற்றுவிட்டது. இனிவரும் காலங்களின் இவற்றினை யாரும் எதற்காகவும் மாற்றவும் முடியாது, வளைத்துக் கொடுக்கவும் முடியாது. அத்தகைய உரிமை யாருக்கும் கிடையாது என்று முக்கியமான அறிவிப்பினை லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்களை சாட்சியாக வைத்து மிகவும் தெளிவாகவும், கண்டிப்பாகவும் அறிவித்தது இந்த வரலாற்று சிறப்புமிக்க பேருரையில் தான். இதற்கு சாட்சியாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தன்னுடைய திருமறையில் ஒரு வசனத்தினை இறக்கியருளினான்.

‘இஸ்லாம் முழுமையாகி விட்டது’! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ்வருமாறு இறைவசனம் இறங்கியது:

”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)

(அல்குர்அன் 5:3)

மேலே நாம் பார்த்த நபிகள் கோமானின் பேருரையானது வரலாற்றில் மிகவும் சரியாக பதியப்பட்டுள்ளது. நாம் கூறிய விஷயங்கள் மிகவும் குறைவான அளவே. இவைகள் மட்டினின்றி இன்னும் பல அறிவுரைகளைக்கூறி தமது உரையை நிறைவு செய்தார்கள்.

.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s