முஸ்லிம்களின் இறுதிக் கடமை யான ஹஜ்ஜுக் கடமையை நிறை வேற்ற 2012ம் ஆண்டு தயாராக வுள்ள அனைவரும் இம்மாதம் 28ம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு செய்யாதவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வது கஷ்டமாகும் என்று நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார்.
வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகக் காரியாலயத் திறப்பு விழா நிகழ்வு இயக்குனர் சபைத் தலைவர் எம். ஏ. சலாம் தலைமையில் திங்களன்று இடம்பெற்ற போதே சிரேஷ்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-
ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதற்கு இவ் வருடம் தாயாராகவுள்ள அனைவரும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் 25000.00 செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளவும் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் போது செலுத்த வேண்டிய மொத்தத் தொகையில் இருந்து தாங்கள் செலுத்திய பதிவுக்கட்டணம் கழித்தே பெறப்படும்.
முதன் முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு அதற்குப் பிறகுதான் வழங்கப்படும் என்றும் கூறினார்.
கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப் பெற்ற நிருவாகக் காரியாலயத் திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவுத்துறை அமைச்சர் எம். எஸ். சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ். எஸ். அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே. பி. எஸ். ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ. எம். நெளபர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-தினகரன்.